MEDIA STATEMENTNATIONAL

சமூக ஊடகம்,  இணையம் வழி  விநியோகச் சேவை நடத்துநர்கள் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்

புத்ராஜெயா, ஜூலை 28-  சிறார்கள்  மற்றும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான இணையச் சேவை  தொடர்பான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு வரும் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு 2025 ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

இணைய மோசடி, பகடிவதை மற்றும் சிறார்களுக்கு எதிரான  பாலியல் குற்றங்கள்  உள்ளிட்ட  இணையக் குற்றங்களின்  அதிகரிப்பைத் தடுப்பதற்கு ஏதுவாக சமூக ஊடகச் சேவைகள் மற்றும் இணையம் வழி பொருள் ஆர்டர் செய்யும் நிறுவனங்கள்  மலேசிய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற அமைச்சரவையின் முடிவிற்கு ஏற்ப இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாக  தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம.சி)  தெரிவித்தது.

மலேசியாவில் குறைந்தபட்சம் 80 லட்சம்  பதிவு பெற்ற  பயனீட்டாளர்களைக் கொண்ட சமூக ஊடகச் சேவைகள் மற்றும் இணையப் பொருள் விநியோகச் சேவைகள் அனைத்தும் 1998 ஆம் ஆண்டு   தொடர்பு  மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் சேவை  உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த புதிய விதிமுறை,  கட்டமைப்பு லைசென்ஸ்  தகுதிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் தளங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி பயனீட்டாளர்களை இது சம்பந்தபடுத்தாது என்று எம்.சி.எம்.சி. வெளியிட்ட  அறிக்கை கூறியது.

நடைமுறைக்கு வரும் தேதிக்குப் பிறகு  இந்த உரிமத்தைப்  பெறத் தவறுவது  குற்றமாகும். சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு எதிராக  தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது குறிப்பிட்டது.

இந்த நடவடிக்கை பாதுகாப்பான  சுற்றுச்சூழல் அமைப்பையும்  பயனீட்டாளர்களுக்கு குறிப்பாக சிறார்கள் மற்றும்  குடும்பத்திற்கு சிறந்த அனுபவத்தையும் உருவாக்கும்  என்று அந்த ஆணையம்  கூறியது.


Pengarang :