NATIONAL

இன்று முதல் மைகிட் குழந்தை அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் மீண்டும் திறக்கப்படும்

புத்ராஜெயா, ஜூலை 25 – இன்று முதல் மைகிட் குழந்தை அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் அனைத்து தேசிய பதிவுத் துறை அலுவலகங்களிலும் மீண்டும் திறக்கப்படும்.

மூல அட்டைகளுக்கான சிப்ஸ் தட்டுப்பாடு காரணமாக விண்ணப்பங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முன்னர் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து ரசீதைப் பெற்ற விண்ணப்பதாரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய பதிவுத் துறை அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் தங்கள் அச்சிடுதல் நிலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

“சரிபார்ப்பு காலம் ஜூலை 29, 2024 முதல் அக்டோபர் 31, 2024 வரை இயங்கும். இந்த காலத்திற்குப் பிறகு, மைகிட் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். மேலும் புதிய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று இன்று அறிக்கை ஒன்றில் தேசிய பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் அச்சிடப்பட்ட மைகிட் கார்டுகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இது மைகிட் அட்டைகள் குவிவதை தவிர்க்கிறது.

மேலும் விசாரணைகளுக்கு, தேசியப் பதிவுத் துறையின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவை 03-88807077 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக மைக்ரோசிப்களின் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான மைகிட் அட்டைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

– பெர்னாமா


Pengarang :