NATIONAL

சபா மீதான கோரிக்கை – ஒவ்வொரு அங்குல நிலத்தையும் தற்காப்போம் பிரதமர் சூளுரை

புத்ராஜெயா, ஜூலை 30- சபா உள்ளிட்ட உரிமை கோரல் விவகாரத்தில் அரசாங்கம் ஒருபோதும் சமரசப் போக்கை கடைபிடிக்காது என்பதோடு நாட்டின் இறையாண்மையை ஒரு அங்குலம் கூட விடாமல் தற்காக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார்.

சபா மீதான பிலிப்பைன்ஸ் நாட்டின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. நமது மக்களின் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதோடு நமது உரிமை மற்றும் இறையாண்மை தொடர்பில் எந்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபட மாட்டோம் என அவர் சொன்னார்.

சபா மீது பிலிப்பைன்ஸ் கோரிக்கை வைத்துள்ள போதிலும் மலேசியாவுக்கும் அந் நாட்டிற்கும் இடையிலான அரச தந்திர உறவுகள் சிறப்பாக உள்ளதோடு தமக்கும் அதிபர் பெரடின ண்ட் மார்க்கோஸ் ஜேஆருக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானதாகவும் அணுக்கமானதாகவும் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, இந்த உறவினை நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் சபா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்ததை உணர்த்தும் வரலாற்றை நாட்டைப் பாதுகாக்கும் நமது குழுவினர் உணர்ந்திருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று இங்கு நடைபெற்ற 2024ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மாத நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அடிப்படையற்ற மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான உள்ளடக்கங்களையும்  மலேசியாவின் ஒரு பகுதியாக விளங்கும் சபா மாநிலத்தின் இறையாண்மை மீது கேள்வியெழுப்பும் கருத்துகளையும் தாங்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சபா மலேசியாவின் ஒரு பகுதி என்பதை வலியுறுத்தி வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.


Pengarang :