NATIONAL

கவனக் குறைவாகப் பேருந்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

ரொம்பின், ஆக 1- மரணம் ஏற்படும் அளவுக்கு  பொறுப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தி பயணிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக  சுற்றுலா பேருந்து  ஓட்டுநர் ஒருவருக்கு எதிராக இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் மெலடி வூன் ஸீ முன் தனக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை
ஊன்றுகோல் மற்றும் முகக்கவசம் அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரான 50 வயதான ஜாம்ரி பொன் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஜூன் 9 ஆம் தேதி குவாந்தான்-சிகாமாட்  சாலையின்  126வது கிலோமீட்டரில்
நள்ளிரவு 12.30 மணியளவில்  குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்  20,000 வெள்ளி முதல்  50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் 1987ஆம் ஆண்டு  சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41 (1)வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான   நூர் அஷிகின் ஹாஷிம், குற்றஞ்சாட்டப்பட்டவரை 10,000 வெள்ளி  ஜாமீனில் விடுவிக்க பரிந்துரைத்தார்.

எனினும்,  ஜாமீன் தொகையை குறைக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்ட வழக்கறிஞர் முஹம்மது மறுப்பு கைருல் ஹிசாம், தனது கட்சிக்காரர் தற்போது வேலை செய்யவில்லை என்பதோடு இடுப்பு மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களுக்கு இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார். மேலும் ஊனமுற்ற உடன்பிறப்பு உட்பட
மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு ஆதரவளிக்க வேண்டியுள்ளதால் ஜாமீன் தொகையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன்   5,000 வெள்ளி  பிணையில் விடுவிக்க அனுமதித்த மாஜிஸ்திரேட், ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு  ஏதுவாக வழக்கை  ஆகஸ்டு 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Pengarang :