SELANGOR

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் சுராபாயாவில் மருத்துவச் சுற்றுலாக் கண்காட்சி

ஷா ஆலம், ஆக 1 – இந்தோனேசியாவின் சுராபாயாவில்  நேற்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ‘எம்எச்எக்ஸ்போ’ எனப்படும்  மருத்துவ சுற்றுலா கண்காட்சிக்கு  மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மலேசியா ஹெல்த்கேர் டிராவல் கவுன்சில் எனப்படும் மருத்துவ சுகாதார மன்றத்துடன்  இணைந்து டூரிசம் சிலாங்கூர் நடத்தும் இக்கண்காட்சி, சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும்  மாநிலமாக சிலாங்கூரை  பிரபலபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மந்திரி சார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அவிசேனா நிபுணத்துவ மருத்துவமனை, கேபிஜே ஹெல்த்கேர் பெர்ஹாட், சன்வே மெடிக்கல் சென்டர், எம்எஸ்யு மெடிக்கல் சென்டர் மற்றும் சுபாங் ஜெயா மருத்துவ மையம் உள்ளிட்ட 11 மருத்துவமனைகள் இந்த  கண்காட்சியில் பங்கேற்கின்றன என அவர் சொன்னார்.

சுராபாயாவிலிருந்து பலர் சிகிச்சைக்காக மலேசியாவுக்கு வருகிறார்கள். ஆனால்  அவர்கள் பினாங்கு மற்றும் மலாக்காவுக்குச் செல்வதை ஆய்வுகள் காட்டுகின்றன.

ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் மகப்பேறு, மகளிர் மருத்துவம், இரைப்பை குடல் மற்றும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகளோடு சிறப்பு மருத்துவ நிபுணர்களையும் கொண்டிருப்பதால் சிலாங்கூர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் இன்று கூறினார்.

முன்னதாக,  சுரபாயா, துஞ்சாங்கன் 6,  எனுமிடத்தில் நடைபெற்ற ‘லிபுரான்   சேஹாட், யா டி சிலாங்கூர் அஜா’ என்ற தலைப்பிலான மருத்துவ சுற்றுலாக் கண்காட்சியை அமிருடின் தொடக்கி வைத்தார்.  சுற்றுலாத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம்மும் இந்நிகழ்வில்  கலந்து கொண்டார்.

அடுத்த ஆண்டு எண்பது லட்சம்  சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்ட  2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டை ஊக்குவிக்கும் முயற்சியாகவும் இந்த பிரச்சாரம் உள்ளது என்று அமிருடின் கூறினார்.

இந்தோனேசியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சிலாங்கூரில் தங்கியிருக்கும் போது சிறந்த வசதிகளுடன் கூடிய விருந்தோம்பலைப் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

கடந்தாண்டு இந்தோனேசிய சுற்றுலாப் பயணிகளின் வருகை   62.5 சதவீதம் அதிகரித்து 168,000 பேராக ஆகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 103,000 பேராக இருந்தது என்றார் அவர்.


Pengarang :