SELANGOR

சாலை சீரமைப்பு பணிகளுக்காக மாநில அரசு இவ்வாண்டு வெ.2 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், ஆக 2- மெகா சாலை சீரமைப்புத் திட்டத்தை மாநில அரசு இவ்வாண்டும் தொடர விருக்கிறது. மாநிலத்தில் உள்ள சாலைகள் நல்ல நிலையில் பொது மக்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதி செய்ய இத்திட்டத்தை  இவ்வாண்டும் தொடர மேலும் 2 கோடி வெள்ளியை அது ஒதுக்கீடு செய்துள்ளது.

மாரிஸ் எனப்படும் மலேசிய சாலை தரவு தகவல் முறை ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்டு  கூடுதல் ஒதுக்கீடாக விளங்கும் இந்த நிதி மாநிலச் சாலைகள், ஊராட்சி மன்றச் சாலைகள் மற்றும் கிராமச் சாலைகளை தரம் உயர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் என்று அடிப்படை வசதிகள் மற்றும் வேளாண் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

பொதுப்பணித் துறையின் வாயிலாக இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொகுதி சேவை மையங்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் இந்த நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம் என அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நாங்கள் மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட சாலை பழுது பார்ப்பு பணிகளை மேற்கொண்டு வந்தோம். இம்முறை சாலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அளவைப் பொறுத்து அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிப்பதில் முன்னுரிமை அளிக்கிறோம் என்றார் அவர்.

இவ்வாண்டு தொடங்கி மெகா சாலை சீரமைப்புத் திட்டம் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும். இதுவொரு ஆக்ககரமான நடவடிக்கையாக விளங்குகிறது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு  ஒரு முறை மேற்கொள்ளப்படும் செப்பனிடும் பணிக்கு உண்டாகும் செலவைக் காட்டிலும் இந்த வருடாந்திர பராமரிப்பு பணிக்கு குறைவாகவே செலவாகிறது என்றார் அவர்.

மாநிலத்தில் உள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைப்பதற்காக மாநில அரசு கடந்தாண்டு 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்தது. இந்த மெகா சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பொது மக்களின் வசதிக்காக சாலை விரிவாக்க மற்றும் பராமரிப்பு பணிகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட்டன


Pengarang :