SELANGOR

வாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் இம்மாதம் 15 வெள்ளியாக குறைப்பு- எம்.பி.டி.கே. அறிவிப்பு

ஷா ஆலம், ஆக 2- வாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை கிள்ளான் அரச மாநகர் மன்றம் 15.00 வெள்ளியாக குறைத்துள்ளது. அந்த சலுகை இம்மாதம் முழுவதும் அமலில் இருக்கும்.

மெர்டேக்கா மாதத்தை முன்னிட்டு வழங்கப்படும் இந்த சலுகை 300 வெள்ளி வரையிலான போக்குவரத்து அபராதம் சம்பந்தப்பட்ட குற்றங்களையும் உள்ளடக்கியிருக்கும் என்று மாநகர் மன்றம் கூறியது.

நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவது உள்பட கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்கு ஏதுவாக குறைந்த பட்சம் 15 வெள்ளி மட்டுமே விதிக்கப்படும் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி தங்கள் அபராதங்களைச் செலுத்தி விடும்படி பொது மக்களை அது கேட்டுக் கொண்டது.

எனினும், பிரத்தியேக இடங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்களில் வாகனங்களை நிறுத்தியது தொடர்பான குற்றங்களுக்கு இந்த அபராதச் சலுகை பொருந்தாது எனவும் மாநகர் மன்றம் தெளிவுபடுத்தியது.

 பொது மக்கள்  ipay.mpklang.gov.my/home/kompaun என்ற அகப்பக்கம் வாயிலாகவும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின்  pbtpay.kpkt.gov / home/semak  என்ற இணைப்பின் வாயிலாகவும் குற்றப்பதிவுகளைச் சரிபார்த்து அபராதங்களைச் செலுத்தலாம்.

இது தவிர, எம்.பி.டி.கே தலைமை அலுவலகம், பசார் பெசார் காம்ப்ளக்ஸ் கிளை அலுவலகம், ஜாலான் மேரு, ஜாலான் தெங்கு கிளானா, ஜாலான் ராயா பாராட் மற்றும் ஜி.எம்.  கிள்ளான் சூப்பர் மார்க்கெட்டின் முகப்பிடம் ஆகியவற்றில் ஐ.கியேஸ்க்  இயந்திரங்கள் மூலமாகவும் அபராதம் செலுத்த முடியும்.


Pengarang :