MEDIA STATEMENTNATIONAL

நெங்கிரி இடைத் தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் காலை 9.00 மணிக்குத் தொடங்கியது

குவா மூசாங், ஆக 3- நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் குவா மூசாங் மாவட்ட மன்றத்தின் காம்ளெக்ஸ் பெர்டானாவிலுள்ள டேவான் பெர்டானாவில் இன்று காலை தொடங்கியது.

காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போட்டியிடத் தகுதி உள்ள வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் அதிகாரி நிக் ராய்ஸ்னான் டாவுட் அறிவிப்பார்.

வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வு சீராக நடைபெறுவதை உறுதி செய்ய கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 579 அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேட்பு மனுத்தாக்கலுக்குப் பின்னர் 14 நாட்களுக்கு தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு  வேட்பாளர்களுக்கு கால அவகசாம் வழங்கப்படும். குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக நெங்கிரி விளங்குகிறது.

இந்த தொகுதியில் வரும் ஆகஸ்டு 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில்  உள்ள 14 வாக்காளர்கள் தபால் வழி வாக்குகளைச் செலுத்த முடிவெடுத்துள்ளதால் அங்கு தொடக்க வாக்களிப்பு நடைபெறாது.

இத்தொகுதியில் 14 காவல் துறை உறுப்பினர்கள் உள்பட 320,259 வாக்காளர்கள் உள்ளனர். வேட்பு மனுத் தாக்கல் தினமான இன்று காலை வானிலை தெளிவாக இருக்கும் என்றும் எனினும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

கடந்த நடைபெற்ற மாநிலத் தேர்தலுக்குப் பிறகு கிளந்தானில் நடைபெறும் முதலாவது இடைத் தேர்தலாக இது விளங்குகிறது.

அத்தொகுதி காலியானதாக கிளந்தான் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ முகமது அமார் நிக் அப்துல்லா கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பெர்சத்து கட்சியின் முகமது அஸிசி அப்துல் நாயிம் இருந்து வந்தார். அவரது கட்சி உறுப்பினர் அந்தஸ்தை பெர்சத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானது.


Pengarang :