NATIONAL

லைசென்ஸ் இன்றி காரோட்டிய சிறுவனின் தந்தைக்கு வெ.50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்

சிப்பாங், ஆக. 8 – லைசென்ஸ்  இல்லாமல் கார் ஓட்டிய 12 வயது சிறுவனின் தந்தையான பாகிஸ்தானியர் ஒருவர்,  பிறருக்கு தீங்கு ஏற்படும் அளவுக்கு தனது மகனின் நடவடிக்கைகளை  கவனிக்கத் தவறியதன் பேரில்  50,000 வெள்ளி  வரை அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

மலேசியாவில் நிரந்தர வசிப்பிட தகுதியைக் கொண்டிருக்கும்  முகமது சலீம் ஃபசல் குதா (வயது 53) என்ற அந்த ஆடவர்,  இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அகமது ஃபுவாட் ஓத்மான் முன் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த  ஜூலை மாதம்  28ஆம் தேதி இரவு 7.30 மணியளவில்  பூச்சோங்,  தாமான் புத்ரா இம்பியானாவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது,

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி வரையிலான அபராதம், 20 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும்
2001 ஆம் ஆண்டு  சிறார் சட்டத்தின்  31(1)(ஏ) பிரிவின் கீழ்  அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அரசுத் தரப்பில் நூருல் ஃபாராஹின் சசாருடின் வழக்கை நடத்தும் வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில்  வழக்கறிஞர் நபில்லா ரோஸ்லி ஆஜரானார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை   15,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க ஃபாராஹின் பரிந்துரைத்தார். எனினும், கம்பள விற்பனையாளராக பணிபுரியும் தனது கட்சிக்காரருக்கு  மனைவி  மற்றும் ஐந்து பள்ளி செல்லும் பிள்ளைகள் உள்ளதோடு  மாதம் சராசரியாக 3,000 வெள்ளியை மட்டுமே வருமானமாகப் பெறுவதால் ஜாமீன் தொகையை மறுபரிசீலனை செய்யுமாறு நபிலா  நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

பின்னர் நீதிமன்றம் அவரை  ஒரு நபர்  உத்தரவாதத்துடன் 8,000 வெள்ளி  ஜாமீனில் விடுவிக்க அனுமதித்ததோடு  வழக்கை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Pengarang :