SELANGOR

மேரு தொகுதியில் வெள்ளத் தடுப்பு திட்டங்களை மேற்கொள்ள வெ.22 கோடி ஒதுக்கீடு

கிள்ளான், ஆக. 8 – மேரு சட்டமன்றத் தொகுதியின் பல இடங்களில் வெள்ளத் தடுப்பு திட்டங்களை மேற்கொள்ள 22 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வழங்கிய இந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை கடந்த ஜனவரி மாதம் இந்த  வெள்ளத் தடுப்புப் பணிகளை தொடக்கியுள்ளதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரியாம் அப்துல் ரஷிட் கூறினார்.

வெள்ள அபாயம் அதிகம் உள்ள ஜாலான் ஹம்சா ஆலாங், ஃபேரி பார்க், சுங்கை பிஞ்சாய், சுங்கை பாலோங் ஆகிய இடங்களில் இந்த வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் வெள்ள நீர் சேகரிப்பு குளத்தை நிர்மாணிக்கும் பணம் எதிர்வரும் 2029ஆம் ஆண்டில் முழுமையாகப் பூர்த்தியடையும் என்று நேற்று இங்குள்ள எக்கோன்சேவ் பேரங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தை தடுப்பதற்கான குறுகியக் கால நடவடிக்கையாக வடிகால்,  நீர் பாசனத் துறை மற்றும் பொதுப்பணி இலாகாவுடன் இணைந்து மேரு தொகுதியிலுள்ள கால்வாய்களை துப்புரவு செய்யும் பணியை தாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

இந்த வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் யாவும் முற்றுப் பெற்றப் பின்னர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெள்ளப் பிரச்சனை எழாது என நாங்கள் நம்புவதோடு பொதுமக்களும் வெள்ள அபாயம் குறித்து அச்சமடைய வேண்டியதில்லை என்றார்.

இதனிடையே, தாமான் டாயா மாஜூவில் வடிகால்களை தரம் உயர்த்தும் பணியை கிள்ளான் அரச மாநகர் மன்றம் விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இப்பகுதியில் லேசாக மழை பெய்தாலும் வீடுகளில் வெள்ளம் புகுந்து விடுகிறது. அங்குள்ள கால்வாய்கள் 20 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவையாக உள்ளதால் அவை அதிக நீரை விரைந்து வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :