NATIONAL

புதிய போதைப் பொருள் வழக்குகளால் சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பு

மச்சாங், ஆக. 9 – போதைப்பொருள் தொடர்பான புதிய வழக்குகளின் எண்ணிக்கை உயர்வால்  நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரித்து வருவதாக சிறைச்சாலைத்  துறை தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் ஜோகூர், கிளந்தான் மற்றும் திரங்கானு  ஆகிய மாநிலங்களில் உள்ள  நகரங்களில் பொதுவாக நெரிசல் ஏற்படும் நிலையில்  காஜாங், சுங்கை பூலோ  மற்றும் குளுவாங் சிறைச்சாலைகளில்  நெரிசலுக்கான அறிகுறிகள் தென்படுவதாக சிறைத் துறை  துணைத் தலைமை ஆணையர் (பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தம்) டத்தோ அப்துல் அஜிஸ் அப்துல் ரசாக் கூறினார்.

மீண்டும் மீண்டும் சிறைக்கு வரும் குற்றவாளிகளால்  நெரிசல்  ஏற்படவில்லை. மாறாக, போதைப்பொருள் தொடர்பான புதிய வழக்குகளால் இந்த எண்ணிக்கை உயர்வு ஏற்பட்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற  நடைபெற்ற இஸ்லாமிய கலை விழா, அல்-குர்ஆன் ஓதுதல் மற்றும் சிறைக் கைதிகளுக்கான நஷிட் போட்டியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில்   71,000 கைதிகளை மட்டுமே தடுத்து வைப்பதற்கு உகந்த சூழல் உள்ள நிலையில் தற்போது 85,350க்கும் மேற்பட்ட கைதிகள்  உள்ளனர் என்று கூறினார்.

இப்பிரச்சனையை சரியாகக் கையாளாவிட்டால்  நிலைமை மோசமாகிவிடும் என எச்சரித்த அப்துல் அஜீஸ், இதற்கு   தீர்வு காண  தமது துறை   உள்துறை அமைச்சுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள்  அடையாளம் கண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது சிறைத் துறை சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்க பரோல் முறை, கட்டாய வருகை ஆணை, உரிமம் பெற்ற கைதிகளை விடுவித்தல், கைதிகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் திட்டம் மற்றும் சமூக மறுவாழ்வுத் திட்டம் போன்ற திட்டங்களை அமல்படுத்தி வருகிறது  என்றார் அவர்.


Pengarang :