NATIONAL

மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்த இளம் பெண் கைது

புத்ராஜெயா, ஆக. 9 – மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து அதன்
ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்த சந்தேகத்தின் பேரில் இளம் பெண்
ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்நாட்டைச் சேர்ந்தவரான அந்த பதினான்கு வயதுப் பெண் செர்டாங்,
சுல்தான் இடரிஸ் ஷா மருத்துவமனையின் முகப்பிடத்தில் நேற்று காலை
9.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் கூறினார்.

மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் நுழைந்த அடையாளம்
தெரியாத பெண் ஒருவர், தன்னை மருத்துவ அதிகாரி எனக் கூறிக்
கொண்டதோடு அறுவை சிகிச்சையில் உதவப் போவதாகவும் கூறுவதாக
மருத்துவமனையின் பணியாளர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் 1.00
மணியளவில் மாவட்ட காவல் துறைத் தலைமையகத்தைத் தொடர்பு
கொண்டு புகார் அளித்ததாக அவர் சொன்னார்.

நேற்று காலை 8.30 மணியளவில் அதே பெண் போலி அடையாள
அட்டையைப் பயன்படுத்தி மருத்துவமனையின் முகப்பிடத்தில் பதிவு
செய்ய முயன்றதைக் கண்ட மருத்துவமனை பணியாளர்கள் உடனடியாகக்
காவல் துறையைத் தொடர்பு கொண்டனர் என்றார் அவர்.

அப்பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மருத்துவமனை
உடைகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர் என்று அவர்
நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அத்துமீறி நுழைந்தது மற்றும் அரசாங்கப் பணியாளர் போல்
ஆள்மாறாட்டம் செய்தது ஆகிய குற்றங்களுக்காக தண்டனைச் சட்டத்தின்
448 மற்றம் 170 பிரிவுகளின் கீழ் இச்சம்பவம் மீது விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது என்று அவர் சொன்னார்.

அத்துமீறி நுழைந்தது தொடர்பான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால்
அப்பெண்ணுக்கு மூன்றாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது
கூடுதல் பட்சம் 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்கு ஈராண்டுகள் வரையிலான சிறை
அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.


Pengarang :