NATIONAL

ஜென்ஜாரோமில் இருவர் கடத்தல்-ஜந்து சந்தேக நபர்கள் கைது

ஷா ஆலம், ஆக. 9 –  கடந்த திங்கள்கிழமை  கோல லங்காட்,  ஜென்ஜாரோமில் ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து இரண்டு சகோதரர்களைக் கடத்தியதாகக் சந்தேகிக்கப்படும் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கடத்தல் தொடர்பில் சம்பவ தினத்தன்று காலை 8.45 மணியளவில் 29 வயதான உள்ளூர் பெண் ஒருவரிடம் இருந்து புகார் கிடைத்ததாக கோல லங்காட் மாவட்ட  காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ரிட்வான் முகமட் நோர் @ சாலே கூறினார்.

இரும்பு கம்பிகளை ஏந்திய  அடையாளம் தெரியாத ஆடவர்கள் தனது இரு தம்பிகளை கடத்திச் சென்றதாக அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார் என்று அவர் சொன்னார்.

அன்றைய தினம் காலை 7.00 மணியளவில் வீட்டிற்கு வந்த  ஆடவர்கள் பாதிக்கப்பட்ட இருவரையும் வெளியே வரும்படி அழைத்துள்ளனர். பின்னர் சந்தேக நபர்கள் 20 மற்றும் 26 வயதுடைய  அவ்விருவரையும்   காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர் என அவர் குறிப்பிட்டார்.

தனது 26 வயது சகோதரனை தொடர்பு கொள்ள புகார்தாரர் மேற்கொண்ட   முயற்சி தோல்வியில் முடிந்தது என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இப்புகாரின் அடிப்படையில்  22 முதல் 37 வயதுடைய இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட ஐந்து பேரை  கைது செய்த போலீசார் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கிள்ளான் பண்டார் புக்கிட் ராஜாவில்அதிரடிச் சோதனை நடத்தி மூத்த சகோதரரை மீட்டனர் என்றார் அவர்

மேலும் இந்தச் சோதனையில் திருடப்பட்ட வாகனம், திருடுவதற்குப் பயன்படும் கருவிகள் மற்றும் திருடப்பட்டதாக நம்பப்படும் பொருள்களும் கைப்பற்றப்பட்டன ரிட்வான்  கூறினார்.

சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து   இரவலாகப் பெற்ற காருக்கு  இழப்பீடு வழங்கப்படாததே  இந்த கடத்தல் சம்பவத்திற்கான காரணம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :