NATIONAL

ஆடம்பரக் குடியிருப்புகளில் குடிநுழைவுத்துறை சோதனை- 38 அந்நிய நாட்டினர் கைது

கோலாலம்பூர், ஆக 9 – கோலாலம்பூர் குடிநுழைவு  துறையினர் நேற்று  நள்ளிரவு 12.15 மணியளவில் தலைநகரில் உள்ள  இரண்டு ஆடம்பர அடுக்குமாடி  குடியிருப்பு தொகுதிகளில் நடத்திய சோதனையில் 29 ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் உட்பட 38 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

‘ஓப் பிந்து’  என்ற  பெயரில் நடத்தப்பட்ட இச்சோதனை  நடவடிக்கையில் செந்தூலில் உள்ள 20 மாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள  25 வீடுகளில்  சோதனை நடத்தப்பட்டதாக அதன் இயக்குநர் வான் முகமது செளபி வான் யூசுப்  கூறினார்.

ஒவ்வொரு வளாகத்திலும் குடியிருந்த அனைவரும் வெளி நாட்டவர்களாகக் காணப்பட்டனர். அந்த வீடுகள் ஒவ்வொன்றும்  1,500 தலா வெள்ளிக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன என அவர் சொன்னார்.

இரண்டு ஆடம்பர அடுக்குமாடி  தொகுதிகளில் 102 வெளிநாட்டினரை நாங்கள் சோதனை செய்தோம். அவர்களில்  ஐந்து முதல் 64 வயதுக்குட்பட்ட  38 சட்டவிரோதக் குடியேறியவர்களை கைது செய்தோம் என அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 இந்திய பிரஜைகள், 11 பாகிஸ்தானியர்கள் 11 நேப்பாள நாட்டினர் மற்றும் நான்கு  பிலிப்பினோக்களும் அடங்குவர். அவர்கள் முறையான பயண ஆவணங்கள் இல்லாதது மற்றும் அதிக காலம் தங்கியிருப்பது போன்ற குற்றங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது  என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆடம்பர அடுக்குமாடித் தொகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினர் அதிகரிப்பு தொடர்பில்  பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையில்  கோலாலம்பூர்  குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட  இரண்டு வார உளவு நடவடிக்கைக்குப் பிறகு ஓப் பிந்து சோதனை தொடங்கப்பட்டது.


Pengarang :