MEDIA STATEMENTSELANGOR

கோல குபு பாரு தொகுதி ஏற்பாட்டில் பாரம்பரியக் கிராமங்களில் தேசியக் கொடி விநியோகம்

ஷா ஆலம், ஆக. 13- மக்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்க்கும் நோக்கில் கோல குபு பாரு தொகுதியிலுள்ள அனைத்து பாரம்பரிய கிராமங்களுக்கும் தேசியக் கொடி விநியோகிக்கப்படவுள்ளது.

இந்நடவடிக்கையின் வாயிலாக ஒற்றுமையை வளர்ப்பதற்கும் நேசத்திற்குரிய நமது நாட்டின் சுதந்திரத்தின் உண்மையான பொருளை இளம் தலைமுறையினர் உணர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று தொகுதி உறுப்பினர் பாங் சோக் தா கூறினார்.

இந்நோக்கத்தின் அடிப்படையில் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் மற்றும் மாவட்ட மற்றும் நில அலுவலகத்துடன் இணைந்து அனைத்து பாரம்பரியக் கிராமங்களுக்கும் செல்லவிருக்கிறோம். நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன நிலையில் நாடு அடைந்து சுதந்திரத்தை நாம் தொடர்ந்து கட்டிக்காப்பது அவசியமாகும் என்றார் அவர்.

பொது மக்களை நேரில் சந்திப்பதற்கும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை நேரில் கண்டறிவதற்கும் இந்த திட்டம்  துணை புரியும் என நம்புகிறேன் அவர் தெரிவித்தார்.

நேற்று கோல குபு பாரு நகரில் 2024 ஜாலுர் கெமிலாங் மெர்டேக்கா கெம்பாரா வாகன அணியைத் தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

முன்னதாக, தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு நாட்டுப் பற்றை வளர்க்கும் நோக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த கெம்பாரா மெர்டேக்கா ஜாலுர் கெமிலிங் நிகழ்வைத் தொடக்கி வைத்தார். 

மாநிலந்தோறும் வருகை புரியும் இந்த வாகன அணி, ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுமக்களிடம் தேசியக் கொடியை விநியோகிக்கும்.


Pengarang :