MEDIA STATEMENTNATIONAL

பொழுதுபோக்கு மையத்தில் துப்பாக்கிச்சூடு – நால்வர் கைது

கோலாலம்பூர், ஆக. 11 –  புடுவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில்  ஏற்பட்ட  சண்டை மற்றும் கலவரத்தின் எதிரொலியாக நிகழ்ந்த  துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையவர்கள்  என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு ஆடவர்களைப்  போலீசார் கைது செய்துள்ளனர்.

இரு கும்பல்களுக்கிடையிலான மோதல் சம்பவம் குறித்து நேற்று அதிகாலை 3.45 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக   கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா கூறினார்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட  முதற்கட்ட விசாரணையில் மூன்று தோட்டா உறைகள்  மற்றும் இரண்டு பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனறு அவர் சொன்னார்.

இந்த சண்டையில் 29 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு உள்ளூர் ஆடவர்கள் காயமடைந்தாகக் கூறிய அவர்,  கூரிய ஆயுதங்களால்  ஏற்பட்ட காயங்களுக்காக  அவர்கள் அனைவரும்   கோலாலம்பூர் மருத்துவமனை மற்றும் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை அறுமதிக்கப் பட்டனர் என்றார்.

சிகிச்சைக்குப் பின்   மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அவர்கள் அனைவரும்   மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த நான்கு பேரையும் விசாரணைக்காக  தடுத்து வைப்பதற்கு நீதிமன்றத்தில் இன்று   விண்ணப்பம்  செய்யப்படும் என்று ருஸ்டி மேலும் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148 மற்றும் 1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின்  பிரிவு 39 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.


Pengarang :