MEDIA STATEMENTNATIONAL

மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு எதிரான சோதனையில் 1,000 குற்றப்பதிவுகள் வெளியீடு

கோலாலம்பூர், ஆக. 11 –  தலைநகர் வட்டாரத்திலுள்ள ஐந்து இடங்களில் நேற்று காலை 11.00 மணி முதல் இன்று அதிகாலை 5.00  மணி வரை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை  நடவடிக்கையின் போது​​பல்வேறு போக்குவரத்து குள்றங்களுக்காக  வாகனமோட்டிகளுக்கு மொத்தம் 967 சம்மன்கள் வழங்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை, கோலாலம்பூர் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் கூட்டரசு பிரதேச சாலைப் போக்குவரத்து இலாகாவைச் சேர்ந்த 213 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள்  ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கை  ஜாலான் பங்சார், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, சௌ கிட்,  செந்தூல்,  ஜாலான் துன் ரசாக்,  அம்பாங் மற்றும் பகாங்  சாலை சுற்று வட்டம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது 2,397 வாகனங்கள் சோதனை செய்யப் பட்டதாக கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் கூறினார்.

அதிக இரைச்சல் ஏற்படுத்தும்  வகையில் புகைபோக்கிகள் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சாலை ரவுடித்தனத்தை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது என அவர் சொன்னார்.

நாங்கள் ஒவ்வொரு வாரமும் நகர மையத்தில் சோதனை  நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இருந்த போதிலும்  இரைச்சல்,  தொந்தரவு மற்றும் பிற  வாகனமோட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் செயல்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்று வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச  சத்த அளவு விதிகளை பின்பற்றத் தவறியதற்காக மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டது  என்று ஜாலான் துன் ரசாக்கில்  இன்று நடந்த சோதனை நடவடிக்கையின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


Pengarang :