NATIONAL

வெ. 26 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ  ஷாபு, எக்ஸ்டஸி மாத்திரைகள் பறிமுதல்-  ஆடவர் கைது

சிப்பாங், ஆக. 13 – சபாக் பெர்ணமில் கடந்த வியாழன்று நடத்தப்பட்ட  அதிரடிச் சோதனையில் ஆடவர் ஒருவரைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து  26 லட்சம் வெள்ளி   மதிப்புள்ள 50 கிலோ  ஷாபு மற்றும் 6 கிலோ எக்ஸ்டஸி போதை  மாத்திரைகளை  பறிமுதல் செய்தனர்.

மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் அதிகாலை 4.30 மணியளவில் கார் ஒன்றில்  நடத்திய சோதனையில்  ‘சைனீஸ் பின் வெய்’ எனும்  மூலிகைத் தேயிலை பெயர் குறிக்கப்பட்ட  நீலம் மற்றும் பச்சை நிறப் பாக்கெட்டுகளில் அந்த இரண்டு வகையான போதைப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது என்று சிலாங்கூர் மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் கூறினார்.

இதன் தொடர்பில் 40 வயதுடைய வேலையில்லா நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறிய  அவர்,   போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்கள்  தொடர்பில்  6 கடந்தகாலப் பதிவுகளை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக  நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  சொன்னார்.

போதைப்பொருள் விநியோகிப்பாளராக செயல்பட்டு வந்ததாக  நம்பப்படும் போதைப்பித்தரான அவ்வாடரிடம் மெத்தம்பெட்டமின்  போதைப் பொருள் இருப்பதும் சோதனையில்  கண்டறியப்பட்டது.

ஒவ்வொரு விநியோகத்திற்கும்  அந்த நபருக்கு 2,800 வெள்ளி கூலியாக வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவ்வாடவர் இதுவரை  இரண்டு முறை மட்டுமே போதைப் பொருளை விநியோகம் செய்துள்ளார்  என அவர் மேலும் கூறினார்.

1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக அவ்வாடவர் ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :