NATIONAL

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபருக்கு ஆறு குற்றப்பதிவுகள்

கோலாலம்பூர், ஆக. 14 – ஆறு முந்தைய குற்றப்பதிவுகளைக் கொண்ட
ஆடவர் போலீசாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்
கொல்லப்பட்டார். இச்சம்பவம் காஜாங் மத்திய சுற்று விரைவுச்
சாலையின் (சில்க்) சுங்கை பாலாக் டோல் சாவடியின் பிரிவுச் சாலையில்
நேற்று மாலை 3.00 மணியளவில் நிகழ்ந்தது.

முப்பது வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் காரை நிறுத்த மறுத்ததோடு
போலீசாரை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிலாங்கூர் மாநில
போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் அந்த ஆடவர் துப்பாக்கிக் குண்டு
பட்டு காரிலேயே உயிரிழந்ததாக அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் போது 30 வயது மதிக்கத்தக்க போலீஸ்காரர் ஒருவர்
மீது தோட்டா பாய்ந்ததாகக் கூறிய அவர், எனினும் அவர் தோட்டா
துளைக்காத கவச உடை அணிந்திருந்த காரணத்தால் காயமின்றி
உயிர்த்தப்பியதாக குறிப்பிட்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் காஜாங் மெட்ரோ பிளாசாவிலுள்ள
நகைக்கடை ஒன்றில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட
ஆடவருக்கும் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று
அவர் சொன்னார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும்
தெரிவித்தார்.


Pengarang :