NATIONAL

ஊடகவியலாளர்கள் இடத்தை ஏ.ஐ. நிரப்ப முடியாது- அமைச்சர் ஃபாஹ்மி கூறுகிறார்

கோலாலம்பூர், ஆக. 14 – செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மனிதர்களுக்கு மாற்று அல்ல.  ஆயினும், படைப்பாற்றலை வளர்ப்பதில் குறிப்பாக ஊடகத் துறையில்  ஒரு கருவியாக மட்டுமே அத்த தொழில்நுட்பம் செயல்பட முடியும் என்று  தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

செய்திகளை உருவாக்க அல்லது நிகழ்வுகளை பதிவு செய்ய ஊடகத் துறையினர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை அந்த தொழில்நுட்பம் சாத்தியமாக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, செய்தி சேகரிப்பது  போன்ற  களப் பணிகளில் பத்திரிக்கையாளர்களுக்கு முழுமையான மாற்று சக்தியாக ஏ.ஐ. இருப்பதாக நான் நம்பவில்லை. இருப்பினும், ஸ்டோரிபோர்டு எனப்படும் இயக்கப்படத் தொடர் சித்திரங்களை உருவாக்குவது போன்ற சில அம்சங்களில் ஏ.ஐ. பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன் அவர்  குறிப்பிட்டார்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டாலும் உண்மையான கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை அதனால் முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது என்று நேற்று  இங்குள்ள பந்தாய் டாலாமில் நடைபெற்ற நிகழ்வின் போது அவர் தெரிவித்தார்.

அதேபோல், இத்த தொழில் நுட்பத்தால் ஒரு வரைகலை வடிவமைப்பாளரை முழுமையாக மாற்ற முடியாது. அவ்வாறு செய்தால் வடிவமைப்பாளரை தவிர்த்துவிட்டு  ஒரு விளம்பர நிறுவனம்  மூன்று   கோபுரங்களைக் கொண்ட ஒரு சுவரொட்டியை உருவாக்கிய கதையாகத்தான் முடியும் என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவில்  நன்மைகளும் உண்டு.  தீமைகளும் உண்டு. ஏ.ஐ. ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாக அமையவில்லை என்று அவர் கூறினார்.

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களில் இரண்டிற்குப் பதிலாக மூன்று கோபுரங்களைக் காட்டும் ஏ.ஐ.  உருவாக்கிய  டிஜிட்டல் விளம்பரம் அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலானது.


Pengarang :