NATIONAL

தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்- ஆட்சிக்குழு முடிவு

(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஆக 14 – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு
மாநில அரசு வழங்கும் நிதி பள்ளி மாணவர்களின் கல்வி சார்ந்த
திட்டங்களுக்கும் மனித வள மேம்பாட்டிற்கும் மட்டுமே பயன்படுத்த
வேண்டும் என மாநில ஆட்சிக்குழு முடிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் மாநில அரசு வழங்கும் நிதியில் 70 விழுக்காடு
பள்ளிகளில் கல்வி சார்ந்த அம்சங்களில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவதற்கும் 30 விழுக்காடு மாணவர்களின் மனிதவள
மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்படும் என்று மனிதவளம் மற்றும் வறுமை
ஒழிப்புத் துறைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு
தெரிவித்தார்.

இதற்கு முன்னர் மாநில மற்றும் மத்திய அரசுகள் வெவ்வேறாக இருந்த
காரணத்தால் மாநில அரசு வழங்கும் மானியம் மாணவர்களின் கல்வி
மேம்பாட்டிற்கு மட்டுமின்றி பள்ளிக் கட்டிடங்களை சீரமைப்பது உள்ளிட்ட
பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

எனினும், இப்போது மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே அரசாங்கம் ஆட்சி
புரிவதால் மாநில அரசின் நிதி மாணவர்களின் கல்வி சார்ந்த
நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசின் நிதி பள்ளிக் கட்டிட பழுதுபார்ப்பு
உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்பாட்டிற்கும் பயன்படும் வகையில் இந்த
புதிய விதிமுறையை ஆட்சிக்குழு அமல்படுத்தியுள்ளது என அவர்
சிலாங்கூர் இன்று பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

மாநில அரசின் நிர்ணயித்துள்ள நோக்கங்களின் அடிப்படையில் இந்த
மானியத்தை பயன்படுத்தும் பொறுப்பு பள்ளி பெற்றோர் ஆசிரியர்
சங்கங்களிடம் வழங்கப்பட்டுள்ள வேளையில், மத்திய அரசின் நிதி பள்ளி
மேலாளர் வாரியத்தின் மூலம் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கு
பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

மாநில அரசின் நிதியில் 70 விழுக்காடு அறிவியல் கூடம், தகவல்
தொழில்நுட்ப மையம், திறன் மேம்பாட்டுப் பட்டறை ஆகியவற்றோடு
கணினிகள் மற்றும் உபகரணங்களை பழுதுபார்ப்பது, தரம்
உயர்த்துவதற்கும் ஸ்டெம் மற்றும் திவேட் போன்ற கல்வித்
திட்டங்களுக்காக உபகரணங்கள், செயலி, மென்பொருளை வாங்குவதற்கும்
பயன்படுத்தப்படும்.

அதே சமயம், எஞ்சிய 30 விழுக்காட்டுத் தொகை மனிதவள மேம்பாடு
தொடர்பான திட்டங்களை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று
பாப்பாராய்டு தெரிவித்தார்.

மேற்கண்ட விகிதாசார அடிப்படையில் பள்ளித் தரப்பினர் மானியத்திற்கு
விண்ணப்பம் செய்யலாம் எனக் கூறிய அவர், இதற்கான
விண்ணப்பங்களை ஆகஸ்டு 1 தொடங்கி 31ஆம் தேதிக்குள் பெடுலி
சேஹாட் முன்னெடுப்பு முறையின் வாயிலாக இணையம் வழி
சமர்ப்பிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில அரசு ஆண்டுதோறும் 50
லட்சம் வெள்ளியை மானியமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :