NATIONAL

மண்வாரி இயந்திரத்தை கார் மோதியது-இருவர் பலி, நால்வர் காயம்

சிரம்பான், ஆக. 14 – மின் இணைப்புக் கம்பிகளை பொருத்தும் பணியை
மேற்கொண்டிருந்த மண்வாரி இயந்திரத்தை கார் ஒன்று மோதிய
சம்பவத்தில் இருவர் பலியானதோடு மேலும் நால்வர் காயங்களுக்குள்ளாயினர். இச்சம்பவம் போர்ட்டிக்சன், கம்போங் கெலாம் சாலை சமிஞ்ஞை விளக்கு அருகே இன்று அதிகாலை 1.45 மணியளவில் நிகழ்ந்தது.

இருபத்து நான்கு வயதுடைய கார் ஓட்டுநரும் அக்காரில் பயணம் செய்த
உயர்கல்விக்கூட மாணவியான 18 பெண்ணும் இச்சம்பவத்தில்
உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் அய்டி ஷாம் முகமது கூறினார்.

மேலும், அக்காரில் பயணம் செய்த 16 முதல் 19 வயது வரையிலான
நால்வர் காயங்களுக்குள்ளான வேளையில் மண்வாரி இயந்திரத்தின்
ஓட்டுநர் காயமின்றி உயிர்த்தப்பியதாக அவர் சொன்னார்.

போர்ட்டிக்சனிலிருந்து சிரம்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த
கார் சாலையில் வைக்கப்பட்டிருந்த ‘கோன்‘ எனப்படும் தற்காலி சாலைத்
தடுப்பினை தவிர்க்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து கேபிள்களைப்
பதிப்பதற்காக சாலையோரம் குழி தோண்டிக் கொண்டிருந்த மண்வாரி
இயந்திரத்தை மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்த விபத்தின் எதிரொலியாக கார் ஓட்டுநரும் அதன் பயணியும்
கடுமையான காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களின் உடல் சவப்பரிசோதனைக்காக சிரம்பான் மருத்துவமனைக்குக்
கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :