NATIONAL

விபரீதத்தில் முடிந்த மோட்டார் சைக்கிள் சாகசம் – இரு நண்பர்கள்  விபத்தில் பலி

கோலாலம்பூர், ஆக. 16 – பதின்ம வயதுடைய இரு நண்பர்களின் மோட்டார் சைக்கிள் சாகசம் அவர்களின் உயிரைப் பறித்தது. அவர்கள் ஓட்டிய மோட்டார் சைக்கிள்கள்   ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர்.

இந்த கோர விபத்து  சிலாங்கூர், சுங்கை பூலோ, எல்மினா பிசினஸ்
பார்க்கில்  நேற்றிரவு 11.20 மணியளவில் நிகழ்ந்ததாக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது ஹபீஸ் முஹம்மது நோர் தெரிவித்தார்.

சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்ட 13 வயதுடைய  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள் சவப் பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இந்த விபத்து தொடர்பில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது மற்றும் 1987ஆம் ஆண்டு   சாலை போக்குவரத்து சட்டத்தின்  41 (1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில்  கூறினார்.

பிள்ளைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அதிக அக்கறை உடையவர்களாக இருக்குமாறு முகமது ஹபீஸ் கேட்டுக் கொண்டார். தங்கள் பிள்ளைகள் எந்தவொரு சட்டவிரோதப் பந்தய நடவடிக்கையிலும் ஈடுபடாமலிருப்பதை  அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் தங்கள்  உயிருக்கு மட்டுமின்றி   மற்ற சாலை பயனர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

வயது குறைந்தவர்களை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 39வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படலாம். அதாவது இளம் வயதினர் அல்லது  ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பது சட்டப்படி குற்றமாகும் என்றார் அவர்.


Pengarang :