NATIONAL

40 பாலஸ்தீன நோயாளிகளுடன்   ஆகாயப்படை விமானம் எகிப்திலிருந்து  மலேசியா புறப்பட்டது

கோலாலம்பூர், ஆக.16 – காஸா போரில் காயமடைந்த 40 பாலஸ்தீன பிரஜைகள் சிகிச்சைக்காக நேற்று மாலை எகிப்தின் அல் மசா விமானத் தளத்திலிருந்து அரச மலேசிய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ஏர்பஸ் ஏ-400எம் விமானங்கள் மூலம் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டனர்.

தற்போது எகிப்தில் உள்ள பல மருத்துவமனைகளில் அந்த பாலஸ்தீனர்கள் எலும்பு முறிவு மற்றும் தீப்புண் உட்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று   வருகின்றனர்.

நோயாளிகளை ஏற்றிய அவ்விரு விமானங்களும் இன்று  காலை மலேசியாவிற்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாக மலேசியாவுக்கான எகிப்திய தூதர் ரகாய் நாஸ்ர் பெர்னாமாவிடம் கூறினார்.

மலேசியாவால் நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

காயமடைந்த பாலஸ்தீனர்களை மருத்துவ சிகிச்சைக்காக மலேசியாவிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு ஏர்பஸ் ஏ-400எம் விமானங்கள் எகிப்துக்கு அனுப்பப்பட்டுள்ளதை மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் நேற்று  உறுதிப்படுத்தியிருந்தார்.

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கோரிக்கையின் அடிப்படையில் காயமடைந்த 40 பாலஸ்தீனர்கள் மலேசியாவில் சிகிச்சை பெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்டதாக நாஸ்ர் கூறினார்.

பிரதமர் அன்வாரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட  இணக்கமான முயற்சி இது. மலேசியாவின் ஒத்துழைப்போடு இந்த முயற்சிகள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

காயமடைந்த பாலஸ்தீனர்களை மலேசியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க மலேசியா உதவும் என்று ஆகஸ்டு 4ஆம் தேதி  அன்வார் அறிவித்தார்.

காஸா போரில் இதுவரை  சுமார் 40,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர். மேலும் 92,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

எகிப்தில்  உள்ள 40 மருத்துவமனைகளில் சுமார்  70,000 பாலஸ்தீனர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக நாஸ்ரின் கூறினார்.


Pengarang :