MEDIA STATEMENTNATIONAL

கிரிப்டோகரன்சி திட்ட மோசடியில் பெண்மணி வெ.100,000 இழந்தார்

குவாந்தான், ஆக 18- டெலிகிராம் செயலி  மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட கிரிப்டோகரன்சி திட்டத்தில்  முதலீடு செய்த  விவசாயி 117,289  வெள்ளியை இழந்தார்.

லாபகரமான வருமானத்தை வழங்குவதாக  உறுதியளிக்கும்  விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட அந்த 36 வயதான பெண், சந்தேக நபரால் வழங்கப்பட்ட  இணைய அமைப்பில் பதிவு செய்ததாக பகாங் துணை காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார்.

தொடக்கத்தில்  110  வெள்ளியை முதலீடு செய்த அம்மாது 145 வெள்ளியை லாபமாகப் பெற்றதைத் தொடர்ந்து   20 வெவ்வேறு கணக்குகளில் 27 பரிவர்த்தனைகள் மூலம் மேலும் அதிகத் தொகையை  முதலீடு செய்ததாக அவர் தெரிவித்தார்.

முதலீடு செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று தினங்களுக்குள் அனைத்து முதலீடுகளும்  காணாமல் போய்விட்டது. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த  பாதிக்கப்பட்ட அப்பெண்  இது குறித்து போலீசில் புகார் செய்தார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முன்பின் தெரியாத நபர்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும் மோசடிக்கு ஆளாகாமல் இருக்க முதலீடு தொடர்பில்  காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களைச் சரிபார்க்குமாறும்  நூர் ஹிஸாம் பொதுமக்களுக்களை அறிவுறுத்தினார்.


Pengarang :