NATIONAL

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் கைது

கோலாலம்பூர் ஆகஸ்ட் 22: போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரை அம்பாங்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

அரச மலேசிய காவல்துறை (PDRM) மற்றும் ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை (AFP) ஆகியவற்றின் ஒத்துழைப்பின் விளைவாக, மதியம் 12.30 மணியளவில் நடந்த சோதனையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) இயக்குனர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.

இந்தச் சோதனையில் 25.65 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன், 717 கிராம் ஹெராயின் மற்றும் இரண்டு 9 லிட்டர் இரசாயனத் திரவப் போத்தல்களையும் காவல்துறையினர் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

“இந்த சிண்டிகேட்டின் செயல்பாடானது, முதலில் போதைப்பொருட்களை சேமிப்பதற்காக ஒரு கடை வாடகைக்கு எடுக்கப்பது. பின்னர், அவை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு கொரியர் சேவைகளைப் பயன்படுத்தி விநியோகிக்கப்பது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு RM883,093 என மதிப்பிடப் பட்டுள்ளது. அதை 180,000 பேர் பயன்படுத்த முடியும்” என்று காவ் கோக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, சிண்டிகேட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது என்றார்.

சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபர் மெத்தாம் பேட்டமைன் உட்கொண்டு இருப்பது உறுதியானது. ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அந்நபர் ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவ் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :