NATIONAL

சுக்மா சீலாட் போட்டியின் போது திடலில் போத்தல்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை

மிரி, ஆக. 22- மலேசியா விளையாட்டுப் போட்டியை (சுக்மா) முன்னிட்டு இங்குள்ள மிரி பண்டாராயா அரங்கில் நடைபெற்ற சீலாட் ஆட்டத்தின் போது திடலில் குடிநீர் போத்தல்கள் என நம்பப்படும் பொருட்கள் வீசப்பட்டது தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.

காயங்களை ஏற்படுத்தியது மற்றும் குற்றவியல் ரீதியாக அச்சுறுத்தியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 506 வது பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாக மிரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அலெக்ஸன் நாகா சாபு கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுக்மா ஏற்பாட்டுக் குழுவினரிடமிருந்து தாங்கள் ஒரு புகாரைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட  காணொளி உள்பட பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சம்பவங்கள் எதிர் காலத்தில் நிகழாதிருப்பதை உறுதி  செய்ய கூடுதல் உறுப்பினர்களை தாங்கள் அரங்கில் நிறுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, ரசிகர்கள் இன்றி நடத்தப் பட்ட இப்போட்டியின் போது சீலாட் விளையாட்டரங்கில் அதிகமான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.

நேற்று நடைபெற்ற சீலாட் போட்டியின் 45 கிலோவுக்கும் குறைவான பிரிவில் சரவா மாநிலத்தின் இமான் ஷகிலா மஹாடியும் கூட்டரசு பிரதேசத்தின் நுரின் அல்யா டாமியா முகமது மஸ்ரானும் மோதிய போது இந்த போத்தல் வீச்சு சம்பவம் நிகழ்ந்தது.


Pengarang :