NATIONAL

எஸ்.யு.கே. பஸ் விபத்துக்கு மோட்டார் சைக்கிள் திடீரென சாலையில் நுழைந்ததே காரணம்- போலீஸ்

ஷா ஆலம், ஆக. 22- பந்திங், ஜாலான் சிம்பாங் மோரிப், கம்போங்
கிளானாங் அருகே நேற்று சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தின்
(எஸ்.யு.கே.) பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதற்கு மோட்டார்
சைக்கிளொன்று குடியிருப்பு பகுதியிலிருந்து பிரதான சாலையில்
திடீரென நுழைந்ததே காரணம் என்பதை காவல் துறையினர்
உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது
பக்கத்திலுள்ள கால்வாயில் கவிழ்ந்ததாகக் கோல லங்காட் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ரிட்வான் நோர் சாலே
கூறினார்.

கிளானாங் குடியிருப்பு பகுதியிலிருந்து வந்த ஹோண்டா ரக மோட்டார்
சைக்கிள் பிரதான சாலையில் திடீரென நுழைந்து சிம்போங் மோரிப்
நோக்கிச் சென்றுள்ளது. அப்போது அதே தடத்தில் வந்து கொண்டிருந்த
பஸ் அந்த மோட்டார் சைக்கிளை மோதுவதைத் தவிர்க்க முயன்ற போது
இவ்விபத்து நிகழ்ந்துள்ளது என்று அவர் சொன்னார்.

மிகவும் நெருக்கத்தில் அந்த மோட்டார் சைக்கிள் சாலையில்
நுழைந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளின் இடது புறத்தை லேசாக
உரசிய பஸ் பின்னர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்துள்ளது
என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

லோரி ஓட்டுநராக வேலை செய்யும் 46 வயது மோட்டார் சைக்கிளோட்டிக்கு இச்சம்பவத்தில் கால்கள் மற்றும் விலாவில் காயங்கள் ஏற்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் 41 வயதான பஸ் ஓட்டுநர், 39 வயது உதவியாளர் மற்றும்
21 பயணிகள் காயங்களுக்குள்ளாகி பந்திங் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விபத்து நிகழ்ந்த போது ஷா ஆலம் நீதிமன்றப் பணியாளர்களாகிய
அவர்கள் அனைவரும் சிம்பாங் மோரிப் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :