ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

சரவாக் சுக்மா நிறைவுக்கு வந்தது- அடுத்தப் போட்டியில் வரலாறு படைக்க சிலாங்கூர் தயாராகிறது

கூச்சிங், ஆக. 25- சரவா மாநிலம் ஏற்று நடத்திய நாட்டின் பிரசித்தி பெற்ற போட்டி விளையாட்டான சுக்மா நேற்று இங்குள்ள பெர்பாடுவான் அரங்கில் கண்கவர் நிகழ்வுகளுடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. 

மாநிலத்தின் ஒன்பது இடங்களில் நடைபெற்ற 488 பதக்கங்களுக்கான 37 விளையாட்டுகளை உள்ளடக்கிய இந்த 21வது சுக்மா போட்டியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு அதிகாரப்பூர்மாக முடித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சரவா முதல்வர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபேங், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ, சிலாங்கூர் மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த 21வது சுக்மா போட்டிக்கான சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு பெற்ற சிலாங்கூர் நீச்சல் போட்டியாளர் எண்ட்ரூ கோ ஸெங், சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நெகிரி செம்பிலான் மாநிலத்தின் குறி சுடும் போட்டியாளர் கான் சென் ஜீ ஆகியோரை இப்போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளராக  தேர்வு பெற்றனர். அவர்களுக்கு சவரா மாநில  முதல்வர் விருதுகளை வழங்கினார்.

ஈராண்டுகளுக்கு ஒரு  முறை நடைபெறும் இந்தப் போட்டியின் நிறைவு விழா மாநில விளையாட்டு அணிகளின் மரியாதை அணிவகுப்புடன் தொடங்கியது. பின்னர், வரும் 2026ஆம் ஆண்டு சுக்மா போட்டியை சிலாங்கூர் ஏற்று நடத்தவிருப்பதைக் குறிக்கும் விதமாக மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் சுக்மா கொடியை அபாங் ஜோஹாரி ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வில் சரவா மாநிலத்தின் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் வாண வேடிக்கையும் நடத்தப்பட்டது.

‘ஒளியூட்டும் ஒற்றுமை இலக்கு‘ எனும் கருப்பொருளிலான இந்த சரவா சுக்மா  போட்டியில் சரவா மாநில 76 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தையும் 75 தங்கப் பதக்கங்களுடன் கூட்டரசு பிரதேசம் இரண்டாம் இடத்தையும் 56 தங்கப் பதக்கங்களுடன் சிலாங்கூர் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.


Pengarang :