MEDIA STATEMENTNATIONAL

சுக்மா போட்டியில் தங்கம் வென்ற சிலாங்கூர் விளையாட்டளர்களுக்கு விரைவில் வெகுமதி- மந்திரி புசார்

கூச்சிங், ஆக. 25- மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) தங்கம் வென்ற சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி 10,000 வெள்ளி வெகுமதி விரைவில் வழங்கப்படும்.

சிலாங்கூர் மாநிலத்திற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த விளையாட்டாளர்களுக்கு வெகுமதி வழங்குவதற்கு முன்னர் இப்போட்டியின் அடைவுநிலை தொடர்பான கலந்தாய்வை மாநில அரசு சிலாங்கூர் விளையாட்டு மன்றத்துடன் நடத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தங்கப் பதக்க வெற்றியாளர்களுக்கான வெகுமதியை நாங்கள் முன்னதாகவே தீர்மானித்து விட்டோம். தேசிய மற்றும் சுக்மா நிலையில்  புதிய சாதனைகளைப் படைத்தவர்களுக்கான வெகுமதி குறித்த பரிந்துரையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

வழக்கமாக, சிலாங்கூர் மாநில விளையாட்டு விருதளிப்பு நிகழ்வில் இந்த வெகுமதியை வழங்கி வந்தோம். எனினும், இம்முறை விளையாட்டாளர்களிடமே வெகுமதியை ஒப்படைப்பதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

சரவா மாநிலத்தில் நடைபெறும் 21வது சுக்மா போட்டியில் தங்கம் வெல்லும் விளையாட்டாளர்களுக்கு தலா 10,000 வெள்ளி வெகுமதி வழங்கப்படும் என்று மந்திரி புசார் கடந்த ஆகஸ்டு 3ஆம் தேதி கூறியிருந்தார்.

தனிநபர் போட்டியின் வெற்றியாளர்களுக்கு 10,000 வெள்ளியும் ஐவருக்கும் குறைவான குழு நிலைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு தலா 5,000 வெள்ளியும் ஐவருக்கு மேற்பட்ட குழு நிலை வெற்றியாளர்களுக்கு தலா 3,000 வெள்ளியும் வழங்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.

இந்த சுக்மா போட்டியில் சிலாங்கூல் 56 தங்கம், 64 வெள்ளி மற்றும் 61 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியிலில் மூன்றாவது இடத்தை கைப்பற்றியது.


Pengarang :