MEDIA STATEMENTNATIONAL

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மண் உள்வாங்குதல் – புதிய தடயங்கள் தென்படாத நிலையில் மீட்பு பணி ஒத்தி வைப்பு

கோலாலம்பூர், ஆக 25-  இங்குள்ள  ஜாலான்  மஸ்ஜிட் இந்தியாவில்  ஏற்பட்ட மண்  உள்வாங்குதல் சம்பவத்தில் குழிக்குள்  விழுந்து காணாமல் போன இந்தியப் பெண்ணைத் தேடி மீட்கும் நடவடிக்கை புதிய தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில்  நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள ஆறு  பாதாள கழிவு நீர்  சாக்கடைகளிலும் பந்தாய் டாலாமில் ல உள்ள  இண்டா வாட்டர் குழுமத்தின்  கழிவுநீர் குளத்திலும்  ஏற்கனவே சோதனை மேற்கொண்டுள்ளனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அப்பாண்டி சுலைமான் கூறினார்.

நேற்றிரவு 7.00  மணி வரை மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் முடிவுகளின் அடிப்படையில்  பாதிக்கப்பட்டவர்  பற்றிய எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அதே நேரத்தில், ஆரம்ப இடத்தில் (ஜாலான் மஸ்ஜிட் இந்தியா) மீண்டும்  சோதனை நடத்துவது குறித்து  அரச மலேசிய போலீஸ் படை,  காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கோலாலம்பூர் மாநகர்,  சிவில் தற்காப்புப் படை மற்றும் இண்டா வாட்டர் நிறுவனம்  ஆகியவை பிறகு ஆலோசிக்கும் என்று அவர்  நேற்றிரவு சம்பவம் நடந்த இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறினார்.

தேடுதல் நடவடிக்கையில் பந்தாய் டாலாம் கழிவு நீர் குளம் உள்பட இண்டா வாட்டர் நிறுவனத்தின் ஆறு   பாதாள கழிவுநீர்  தடங்களில்  இன்னும் கவனம் செலுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

தேடுதல் பகுதியை வேறு இடங்களுக்கு விரிவுபடுத்த நாங்கள் திட்டமிடவில்லை.  ஏனெனில்,  பாதிக்கப்பட்டவர் விழுந்த இடம் சம்பந்தப்பட்ட  ஆறு பாதாள சாக்கடைகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது என்றார் அவர்.

நேற்று முன்தினம்  காலை  இங்குள்ள  ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில்   ஏற்பட்ட  மண் உள்வாங்குதல்  காரணமாக உண்டான எட்டு மீட்டர் ஆழமுள்ள குழியில் விழுந்த இந்திய நாட்டவரான  விஜயலெட்சுமி (வயது 48) என்பவர் காணாமல் போனார்.

குடும்பத்துடன் மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அம்மாது,  அருகிலுள்ள கோவிலுக்கு செல்வதற்காக அப்பகுதி வழியாக நடந்து சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்தது.


Pengarang :