MEDIA STATEMENTNATIONAL

தலைநகரில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை டி.பி.கே எல். மறுஆய்வு செய்யும்- அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், ஆக. 25-  தலைநகரில் ஏற்படும்  திடீர் வெள்ளப் பிரச்சினையைச் சமாளிக்க கோலாலம்பூர் மாநகர் மன்றம்  (டி.பி.கே.எல் ) சீரான  செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) மறுபரிசீலனை செய்யும் என்று பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

இத்தகைய இயற்கைப் பேரிடர்களைச் சமாளிப்பதற்கான சிறந்த நடவடிக்கைகளை எடுக்க வடிகால்  மற்றும் நீர்ப்பாசனத்  துறை போன்ற தொடர்புடைய தரப்பினருடன் மாநகர் மன்றம் இணைந்து செயல்படும் என்று
அவர் சொன்னார்.

மாநகரில்  திடீர் வெள்ள அபாயம் உள்ள இடங்களை டி.பி.கே.எல். அடையாளம் கண்டு வருகிறது என கோலாலம்பூர் டத்தோ பண்டார் (டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முகமது ஷெரீப்) என்னிடம் தெரிவித்தார்  என்று நேற்று டி.பி.கே.எல். டவர் 1 இல் நடைபெற்ற  தலைநகர் வெள்ளம் தொடர்பான  செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை இங்குள்ள கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் ஜலிஹா, அதிக மழைப் பொழிவைத் தொடர்ந்து தண்ணீர் மிக வேகமாக உயர்ந்ததால் அங்கு  வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

முன்னதாக, கனமழை காரணமாக அந்த வர்த்தக மையத்தின் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெரும்பாலான வாகனங்கள் கிட்டத்தட்ட அரை மீட்டர் நீரில் மூழ்கிய வேளையில்  சுங்கை கோம்பாக் அருகே நிறுத்தப்பட்ட சுமார் 50 வாகனங்களும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே,  கடந்த வியாழக் கிழமை  ஜாலான் கெந்திங் கிளாங்,  தாமான் பூங்கா ராயாவில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்திற்கு அப்பகுதியில் உள்ள மண்ணின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என டாக்டர் ஜாலிஹா கூறினார்.

இவ்விவகாரத்தை டி.பி.கே.எல்  மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகள் அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும் இதன் தொடர்பில்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர் கனமழையால் வார்டிபர்ன் கேம்ப் அருகே உள்ள தாமான் பூங்கா ராயாவில் மண் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒரு வீடு பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் உள்ள 17 வரிசை வீடுகளைச் சேர்ந்த  மொத்தம் 52 குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டனர்.


Pengarang :