MEDIA STATEMENTSELANGOR

வர்த்தகத்தை இலக்கவியமயமாக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘சித்தம்‘ மறுசீரமைப்பு

செய்தி ;ஆர்.ராஜா

ஷா ஆலம், ஆக. 25- வர்த்தகத்தை இலக்கவியல்மயமாக்கும் திட்டங்களுக்கு  முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘சித்தம்‘ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின்  நடவடிக்கைகள் மறுசீரமைப்புச்  செய்யப்பட்டு வருகின்றன.

சிறு தொழில்களில் ஈடுபட்டு வரும் இந்திய தொழில்முனைவோருக்கு வர்த்தக உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த ‘சித்த‘ம் அமைப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆட்சிக் குழுவின் வசமிருந்து தற்போது எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகி எஸ்.கென்னத் சேம் கூறினார்.

ஹிஜ்ராவின் ஒரு பிரிவாகச் செயல்பட்டு வந்த இந்த ‘சித்தம்‘ அமைப்பின் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு குறிப்பாக வர்த்தகத்தை இலக்கவியல்மயமாக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அதனை எம்.பி.ஐ. கழகத்தின் கீழ் வைப்பதற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி பரிந்துரைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

‘சித்தம்‘ ஏற்பாட்டில் ஏற்கனவே நான்கு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வந்த வேளையில் கூடுதலாக இலக்கவியல் வர்த்தகம் சார்ந்த திட்டத்தையும் சேர்ப்பதற்கு ஏதுவாக புதிய செயலறிகைகையை தயாரிக்கும்படி தாங்கள் கேட்டுக்  கொள்ளப் பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த செயலறிக்கையைத் தயாரிக்கும் பணியில் தாங்கள் தற்போது ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர், அந்த அறிக்கை தயாரானவுடன் ஒப்புதலுக்காக அது ஆட்சிக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

‘சித்தம்‘ அமைப்பின்  வாயிலாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வரும் நான்கு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களின் வழி குறைந்த வருமானம் பெறும் தரப்பைச் சேர்ந்த சுமார் எட்டாயிரம் இந்தியர்கள் இதுவரைப் பயனடைந்துள்ளனர் என்றும் கென்னத் தெரிவித்தார்.

‘சித்தம்‘ அமைப்பு அமல்படுத்தியுள்ள நான்கு முன்னெடுப்புகளில் தொழில் முனைவோர் பயிற்சி திட்டமும் ஒன்றாக விளங்குகிறது. இத்திட்ட பங்கேற்பாளர்களுக்கு வர்த்தகத்தை விரிவாக்கும் நுணுக்கங்கள், ஹலால் சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக வர்த்தகத்தை விளம்பரப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இரண்டாவது திட்டமாக விளங்கும் திறன் மற்றும் உற்பத்தி பயிற்சியின் வழி மகளிருக்கு சமையல் கலை, முக ஒப்பனை, மருதாணி இடுவது, மாலை தொடுப்பது உள்ளிட்ட கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.

இந்திய இளைஞர்கள் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் இணைந்து அத்துறை சார்ந்த நுணுக்கங்களைக் கற்று உபரி வருமானம் பெறுவதற்கு ஏதுவாக ‘க்ரோ‘ எனும் வர்த்தக வழிகாட்டிப் பயிற்சி திட்டத்தையும் சித்தம் நடத்தி வருகிறது.

வர்த்தக உபகரணங்களை இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நான்காவது திட்டம் தற்போது மறுசீரமைப்பு செய்யப் பட்டு வசதி குறைந்தவர்களுக்கு அங்காடிக் கடைகள் அமைத்து அவர்களுக்கு வர்த்தக உபகரணங்களும் ஊராட்சி மன்ற லைசென்ஸ்கள் பெற்றுத் தருவதற்கு உரிய ஏற்பாடு செய்யப்படுகிறது.


Pengarang :