MEDIA STATEMENT

போலி அடையாள அட்டை அரசாங்கம் விவேகமாய் கையாள வேண்டும்

நாட்டில் உலாவும் போலி அடையாள அட்டை விவகாரத்தில் மத்திய அரசாங்கமும் தேசிய பதிவிலாகாவும் விவேகமாய் அதன் துரித நடவடிக்கையினை கையாள வேண்டும் என உத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் உலா வரும் போலி அடையாள அட்டைப் பிரச்னை நடப்பில் பெரும் சிக்கலாய் இருக்கும் பட்சத்தில் அதனை முறியடிக்க கடும் நடவடிக்கையும் விவேகமான அணுகுமுறையும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

போலி அடையாள அட்டை விவகாரத்தில் கைது செய்யப்படுவர்களில் பெரும்பான்மையோர் சபா மாநிலத்தை சார்ந்தவர்கள் என்றும் அவர்கள் யாவரும் மலேசியர்கள் அல்லாமல் பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்தவர்கள் என்றும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

இந்த போலி அடையாள அட்டை தயாரிக்கும் கும்பல் நாட்டில் ஆங்காங்கே செயல்படுவதாக அறியப்படும் நிலையில் இந்த கும்பலின் சட்டவிரோத செயலினை முறியடிக்க போதுமான நடவடிக்கை இல்லை எனும் ஐயம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் 14வது பொது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் போலி அடையாள அட்டைக்கு எதிராய் மத்திய அரசாங்கம் விவேகமான நடவடிக்கை எடுக்குமா அல்லது வழக்கம் போல அலட்சியமும் மெத்தனப்போக்கும்  தொடருமா என்றும் கேசவன் கேள்வி எழுப்பினார்.

இந்த போலி அடையாள அட்டைகளால் அந்நிய நாட்டவர்கள் நாட்டில் சட்டத்தை  ஏமாற்றி உலா வருவதாகவும் அவர்கள் சுலபமாய் வேலையிலும் ஈடுப்படுவதாகவும் கூறிய அவர் மலேசியர்களின் உரிமைகளும் அவர்களின் வாய்ப்புகளையும் இந்த போலி அடையாள அட்டையில் உலா வரும் சட்டவிரோதிகள் கைப்பற்றி விடுவதாகவும் கேசவன் சுப்பிரமணியம் நினைவுறுத்தினார்.

இந்த போலி அடையாள அட்டை விவகாரத்தில் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் இனியும் அலட்சியமாய் உலா வராமல் சிறப்பு பிரிவினை உருவாக்கு அதன் மூலம் இந்த போலி அடையாள அட்டைக்கு எதிராய் நேர்மையாகவும் விவேகமாகவும் ஆக்கப்பூர்வ நடவடிக்கையினை முன்னெடுக்க முன் வர வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு வரை சுமார் 273 பேரை போலி அடையாள அட்டை சம்பவத்தினால் கைது செய்திருப்பதாக தேசிய பதிவிலாகா தலைமை இயக்குநர் டத்தோ முகமட்  யாஷிட் ரம்லி கூறிய தகவல் குறித்து கேசவன் சுப்பிரமணியம் இவ்வாறு கருத்துரைத்தார்.

 

 


Pengarang :