NATIONAL

அரசியல் ஆய்வாளர்கள்:14-வது பொதுத் தேர்தல், மலாய்காரர்களின் சுனாமி

ஷா ஆலம், ஜூன் 6:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தல் மலாய்காரர்களிடையே பெரிய அளவில் சுனாமி ஏற்படலாம் என்று   அரசியல் ஆய்வாளர் முகமட் சாயூதி ஒமார் கருத்து தெரிவித்தார். மலாய்காரர்களின் இந்த வாக்குகள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு மாற்றம் ஏற்படக் காரணம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அவர்களின் ஆதரவு அலையினால் ஆகும் என்றார். துன் மகாதீர் முகமட் அம்னோ கட்சிக்கு எதிராக மலேசிய பெரிபூமி பெர்சத்து கட்சியை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

”   1998-இல் அன்வார் இப்ராஹிம் ஏற்படுத்திய மறுமலர்ச்சி அலை போல் இல்லாவிட்டாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அம்னோவை கண்டிப்பாக பாதிக்கும். இந்த அலை மலாய்காரர்கள் மத்தியில் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் நிலைமையை ஆட்டம் அடையச் செய்யும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

மேலும் விவரிக்கையில், அண்மையில் பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தனது கட்சி அம்னோ தேசிய முன்னணி ஆதிக்கம் செலுத்திய தொகுதிகளில் ஊடுருவி வெற்றிக் கனியை பறிக்க தயாராக இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்சத்து கட்சி பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் இணைந்தது எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி மேலும் பலம் வாய்ந்ததாகவே கருத முடியும் என்றும் இது தேசிய அளவில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் சாயூதி கூறுகையில், இந்த கூட்டணி அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தை வீழ்த்தி புத்ராஜெயாவை அடையும் நோக்கத்தில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். எந்த ஒரு சூழ்நிலையும் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் பொதுத் தேர்தலில் வெற்றி பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி பக்கமே இருக்கும் என்று விவரித்தார்.


Pengarang :