SELANGOR

தோட்டப்பாட்டாளிகளுக்கு வீடுகள் அமைய தற்போதய சிலாங்கூர் அரசாங்கம் பெரும் பங்காற்றியது

செப்பாங், ஆகஸ்ட் 18:
நான்கு தோட்டங்களை சார்ந்த சுமார் 400 குடும்பங்களுக்கு தரை வீடுகள் கிடைப்பதற்கு டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமயிலான சிலாங்கூர் அரசாங்கம் தான் வழி செய்தது.அதுன் இயல்பில் உண்மை என்பதும் குறிப்பிடத்தக்கது.பாதிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகாலமாய் தரைவீட்டிற்காக தோட்டப்பாட்டளிகள் போராடி வந்த நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து டிங்கில் வட்டாரத்தில் அம்பர்தெனாங்கில் 30 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது சிலாங்கூர் மாநில அரசாங்கம் தான்.

கடந்த 1995இல் புத்ரா ஜெயா உருவாக்குவதற்காக நான்கு தோட்டங்களை சார்ந்த 400 குடும்பங்கள் தங்களின் அடையாளத்தை தொலைத்த வேளையில் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் வாக்குறுதி மறந்த தேசிய முன்னணி அரசாங்கம் இதுநாள் வரை பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து தான் வந்தது. மாநில அரசும் மத்திய அரசும் அன்றையக்காலக்கட்டத்தில் தேசிய முன்னணியின் கீழ் இருந்தும் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு வாக்குறுதி கொடுத்ததை போல வீடுகள் கட்டிக்கொடுக்காமல் கைவிட்டது தேசிய முன்னணி அரசாங்கம் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

புத்ரா ஜெயாவை உருவாக்குவதற்காக பெராங் பெசார்,சிர்ஜிலி,கேலவே மற்றும் மிடிங்கிலீ ஆகிய நான்கு தோட்டங்களை சார்ந்த பாட்டாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 20 ஆண்டுகளால் தங்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தை பாக்காதான் அரசாங்கம் கைப்பற்றிய வேளையில் இப்பிரச்னை பாக்காத்தான் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது முந்தைய அம்னோ அரசாங்கம் செய்ய முன் வராத 30 ஏக்கர் நிலத்தை பாதிக்கப்பட்டவரகளுக்காக பாக்காத்தான் அரசாங்கம் ஒதுக்கியது. சைம் டைர்பியிடம் இருந்து ரிம 18 மில்லியனுக்கு வாங்கிய சிலாங்கூர் மாநில அரசாங்கம் 2016 ஜூலையில் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு ஆய்வுகள், பேச்சுவார்த்தைகள் மற்றும் துரித நடவடிக்கைகளுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட 4 தோட்டங்களை சார்ந்தவர்களுக்கு தரை வீடுகள் கட்டுவதற்கு சிலாங்கூர் மாநில பாக்காதான் அரசாங்கம் நிலத்தை ஒதுக்கியது என்பது யாவரும் அறிந்த உண்மை.சுமார் 20 ஆண்டுகளால் செவி சாய்க்காத தேசிய முன்னணி அரசாங்கம் சிலாங்கூர் மாநில பாக்காத்தான் அரசாங்கம் நிலத்தை ஒதுக்கிய பின்னரே வீடுகள் கட்டுவதற்கு முன் வந்தது.இதற்கு முன்னர் மாநில ஆட்சி மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தும் அவர்கள் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களை கண்டுக்கொள்ளாமல் அலட்சியம் செய்துதான் வந்தனர்.தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தரைவீடுகள் கட்டுவதற்கு பிரதமர் நஜிப் அடிகல் நாட்டு நிகழ்வினை செய்திருப்பது நஜிப்பின் வெற்றியோ அல்லது தேசிய முன்னணியின் சாதனையோ அல்ல என்பதுதான் உண்மை.
அஃது பாதிக்கப்பட்ட பாட்டாளிகளின் போராட்டத்திற்காக வெற்றி.அதேவேளையில் சிலாங்கூர் மாநில மக்கள் நலனில் எப்போதும் தனித்துவ கவனம் செலுத்தி வரும் பாக்காத்தான் அரசாங்கத்தின் பரிவு மிக்க செயல்பாட்டின் வெற்றி.வருடக்கணக்கில் போராட்டமாய் இருந்து வந்த இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததே சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கிய 30 ஏக்கர் நிலம் தான் என்பதை சம்மதப்பட்ட தோட்டப்பாட்டாளிகள் அறிவார்கள்.
பாதிக்கப்பட்ட தோட்டப்பாட்டாளிகளுக்காக சிலாங்கூர் மாநில பாக்காத்தான் அரசாங்கம் 30 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு ஒதுக்கி ஆண்டுகள் கடந்தும் இதுநாள் வரை அது தொடர்பில் எவ்வித அக்கறையும் கவனமும் கொள்ளாதா தேசிய முன்னணி அரசாங்கம் நாட்டின் 14வது பொது தேர்தல் குறித்த பரபரப்பு மேலோங்கியிருக்கும் இன்றைய சூழலில் அடிகல் நாட்டினை செய்து முடித்திருப்பது தேசிய முன்னணியின் தேர்தல் யுக்தி என்பதை மறுக்கத்தான் முடியுமா?

இத்தனை ஆண்டுகள் கண்டுக்கொள்ளப்படாத இந்திய சமுதாயத்தினை திசை திருப்புவதற்காக புளுபிரிண்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது போலவே கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டு அவர்களின் அடையாளமே தொலைந்து விட்ட நிலையில் 20 ஆண்டுகள் கடந்து தேசிய முன்னணி அரசாங்கம் தரைவீடு கட்டிக்கொடுக்க முன் வந்திருப்பது நாட்டின் 14வது பொது தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை கவர மேற்கொள்ளும் அரசியல் விளம்பரம்தான்.
தேசிய முன்னணி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று வாக்குறுதிகளாக காற்றில் பறந்த நிலையில் 20 ஆண்டுகள் கடந்து பாதிக்கப்பட்ட தோட்டப்பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்பது பகல் கனவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக இருக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தோட்டப்பாட்டாளி வர்க்கத்தின் எதிர்பார்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் உண்மையை மறைத்து அவர்கள் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டது போல் உருவகப்படுத்துகிறார்கள்.ஆனால்,இப்பிரச்னைக்கு விவேகமான தீர்வுகாண சிலாங்கூர் மாநில பாக்காத்தான் அரசாங்கம் தான் உண்மை வடிவம் கொடுத்தது என்பதை இப்பிரச்னைக்காக தொடக்கத்திலிருந்து போராடி வருபவர்களுக்கும் பாதிக்கப்பட்ட 400 தோட்டப்பாட்டாளிகளின் குடும்பங்களும் அறியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வு: கு. குணசேகரன்


Pengarang :