SELANGOR

சமுதாயச் சுடர் ஹாஜி தஸ்லிம் இறப்பு சமுதாயத்திற்கு பேரிழப்பு

டமன்சாரா, ஆகஸ்ட் 24:

சமுதாயச் சுடர், தமிழ்ப்பள்ளிகளின் காவலன் மற்றும் சமுதாய தொண்டர் டத்தோ ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் நேற்று இரவு 10 மணிக்கு கேபிஜே டமன்சாரா தனியார் மருத்துவமனையில் உயிர் நீத்தார். இன்று காலை 10 மணியில் இருந்து 1 மணி வரை பொது மக்கள் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில், அல் தக்வா பள்ளிவாசலில் இறுதி மரியாதை செலுத்தினார்கள். மாலை 2 மணிக்கு மவுண்ட் கியாரா முஸ்லிம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டார்.

1949 ஆகஸ்ட் 25-இல் பிறந்த ஹாஜி தஸ்லிம், தனது 68 வயதில் காலமானார். ” தான் மதத்தால் முஸ்லிம், ஆனால் இனத்தால் தமிழன், எனது தாய்மொழி தமிழ்,” என்று கர்ஜிக்கும் சிங்கக் குரலோனின் இறப்பு இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

தனது இளம் வயதில் மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்த அன்னாரை ஒரு இந்து தாய் வளர்ப்பு பிள்ளையாக எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை என்றும் மறக்காமல் 16 குழந்தைகளை இனம், மொழி, மதம் என்று பாறாமல் தத்தெடுத்த பெரும் வள்ளல் ஹாஜி தஸ்லிம் என்று சொன்னால் அது மிகையாகாது.

டத்தோ ஹாஜி தஸ்லிமின் இறப்புச் செய்தியைக் கேட்டு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தமது ஆழ்ந்த அனுதாபங்களை கூறினார்.

”   மக்கள் சேவகர் டத்தோ ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்களின் இறப்புச் செய்தியை அறிந்து கவலை அடைகிறோம். மனித நேயத்தை அடிப்படையில் அமைந்த அன்னாரின் போராட்டம் குறுகிய இன அரசியலை ஒட்டுமொத்தமாக என்னை எதிர்க்க தூண்டுகோலாக அமைந்தது,” என்று அஸ்மின் அலி தனது இரங்கல் செய்தியை அயல் நாட்டில் இருந்தாலும் சிலாங்கூர் இன்றுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

”  Sedih mendapat khabar pemergian aktivis Dato’ Hj Thasleem Mohamed. Perjuangannya memperjuangkan kaum manusia memberi saya inspirasi untuk tolak politik perkauman sempit. Al fatihah untuk Allahyarham. Semoga mendapat husnul khatimah dan ditempatkan dalam kalangan hambaNya yang soleh,”

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் கூறுகையில், “டத்தோ ஹாஜி தஸ்லிமின் இறப்பு இந்திய சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பு. எங்கு இந்திய சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தமிழன் என்ற ரீதியில் குரல் கொடுக்கும் நல்ல மனிதர். இன்டர்லோக் பாடபுத்தகமாக கொண்டு வர முற்பட்ட போது தேசிய முன்னணிக்கு எதிராக போராட்டம் நடத்திய மலேசியா நாட்டின் அப்துல் கலாம். இப்படி போன்ற மனிதரை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அல் தக்வா பள்ளிவாசலில் கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலுடன் இறுதி மரியாதை செலுத்தும் போது தெரிவித்தார்.

#கு.குணசேகரன்


Pengarang :