RENCANA PILIHAN

புதிய நம்பிக்கை; புதிய மலேசியா…

நாட்டின் 14வது பொதுத் தேர்தல் முடிவு ஒரு கனவு போல் இருந்தாலும் எந்தவொரு நாட்டிலும் மக்களின் எழுச்சியும் புரட்சியும் தோற்காது என்பதற்கு தக்க சான்று.நாட்டில் சுமார் 60 ஆண்டுகள் அம்னோ தேசிய முன்னணி பெரும் ஆளுமை செலுத்தி வந்த நிலையில் அதனை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதல்ல.இருந்த போதிலும் மலேசியர்கள் ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கை,அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.ஒருபோதும் ஜனநாயகம் மரணித்துப் போகாது என்பதற்கு நாட்டின் 14வது பொதுத் தேர்தல் முன்மாதிரியாக விளங்குகிறது.

பசித்தவன் வயிற்றில்தான் புரட்சி வெடிக்கும் என்பது உலக புரட்சியாளர்களின் மந்திரச் சொல்.மலேசிய மக்கள் எண்ணங்களிலும் சிந்தனையிலும் “மாற்றம்” எனும் சொல் உயிர்க்கொண்ட போதே அம்னோ தேசிய முன்னணி அதன் வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது.மே 9ஆம் தேதி மலேசியர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கை உருவாகியது. அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை புதிய மலேசியா எனும் சிந்தனை வேரூன்றியது.அம்னோ தேசிய முன்னணியும் வெட்டி சாய்க்கப்பட்டது.
சுமார் 60 ஆண்டுகால இனவாத அரசியலுக்கு மலேசியர்கள் ஒற்றுமையாக களமிறங்கி சாவுமணி அடித்துள்ளனர்.நாடு புத்துணர்ச்சியோடு விடுதலை பெற்றுள்ளது.இந்த மாற்றம் மகத்தானது.இது மக்களின் மாபெரும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.தலைமுறைகள் மாறும் போது தலைவிதிகள் மாறும் என்பது போல் நாட்டில் மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு இளம் தலைமுறையின் பங்களிப்பும் போற்றுதல்குரியது.

மக்களின் ஜனநாயக எழுச்சி அம்னோ தேசிய முன்னணியின் இனவாத போக்கும் அதிகார திமிரும் வேரோடு சரிந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இனவாதம் அற்ற போக்கு நம்பிக்கை கூட்டணியின் பெரும் பலமாக திகழ்ந்தது என்றும் கூறலாம்.தேசிய முன்னணியை போல் இனத்திற்கு ஓர் கட்சி இங்கில்லை.குறிப்பாக சீனர்க்ளை பிரதிநிதிக்கவும் இந்தியர்களை பிரதிநிதிக்கவும் தனிதனி கட்சிகள் இல்லாமல் போனது மக்கள் மத்தியில் இனவாத போக்கிற்கு இனி இடமில்லை எனும் சிந்தனை உயிர்த்தெழுந்தது.இனியும் இனவாதம் நாட்டில் தலைத்தூக்காது என்ற சிந்தனை மக்களை பற்றிக் கொண்டது.மக்கள்தான் நாட்டின் சமூக,அரசியல் பொருளாதார வளர்ச்சியின் மையம் என்ற உன்னத சிந்தனையின் அடிப்படையில் நம்பிக்கை கூட்டணி மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற கூட்டணியாகவும் மலேசியாவின் அரசாங்கமாகவும் உயிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்ட இந்த அரசியல் மாற்றம் திடிரென தொடங்கிய ஒன்றல்ல.மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மேலோங்கிட தொடங்கிய போதே அம்னோ தேசிய முன்னணி அதன் வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கி விட்டது.அதன் விளைவே நாட்டின் 12வது பொதுத் தேர்தலில் (2008) அம்னோ தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது.அதன் பின்னர் நடைபெற்ற 13வது பொதுத் தேர்தலில் (2013) எதிர்கட்சி கூட்டணி 52 விழுகாடு பெரும்பான்மை வாக்குகளை பெற்றது.இருப்பினும் அதிக தொகுதிகளை வென்ற நிலையில் தேசிய முன்னணி ஆட்சியை தற்காத்துக் கொண்டது.ஆனால்,2018இல் ஒட்டுமொத்த மலேசியர்களின் புரட்சியும் எழுச்சியும் அதன் உச்சத்தை எட்டியதால் அம்னோ தேசிய முன்னணி ஆட்சியை இழந்தது.

எதிர்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் நிலைத்தன்மை பாதிக்கும், நாடு திவாலாகும்,கலவரம் வெடிக்கும், எதிர்கட்சியினர் மத்தியில் புரிந்துணர்வும் ஒற்றுமையும் இல்லை என்றெல்லாம் மக்களை அம்னோ தேசிய முன்னணி அச்சுறுத்திய நிலையிலும் மக்கள் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அவற்றை எல்லாம் தவிடுப்பொடியாக்கி மலேசியர்கள் விவேகமானவர்கள் என்றும் அம்னோ தேசிய முன்னணியின் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்ள மாட்டோம் எனும் வகையில் நம்பிக்கை கூட்டணிக்கு பெரும் ஆதரவுக் கொடுத்து வெற்றி பெற செய்துள்ளனர்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் இந்திய சமூகத்தை பிரதிநிதிக்கப் போவது யார் எனும் கேள்வியை எதிர்மறையான பார்வையோடு எதிர்கட்சியில் சிலர் இனவாத சிந்தனையை தூண்டிட முனைவது யாவரும் அறிந்ததே.நாம் இனவாத சிந்தனையோடு பின்நோக்கி செல்வதை விட மலேசியர்கள் எனும் ஒருமித்த சிந்தனையோடு நம் உரிமைகள் காக்கப்பட்டு முன்னோக்கி பீடுநடை போடுவதே விவேகமானது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் விடிவெள்ளி மக்கள்தான்.அதில் இந்தியர்களின் பங்களிப்பும் போற்றுதல்குரியது.

இந்தியர்கள் மத்தியில் எழுந்த அரசியல் மாற்றமும் சிந்தனை மாற்றமும் மாபெரும் அரசியல் மாற்றத்தின் வித்து என்பது குறிப்பிடத்தக்கது. இன ரீதியாக நாம் போராடும் போது தோற்றுப் போகிறோம்.இன ரீதியிலான அரசியல் கட்சிகள் வெறும் அரசியல் மட்டுமே செய்வார்கள்.நம் சமூகத்திற்கு மாற்றங்களும் வளர்ச்சியும் மேம்பாடும் கேள்விக் குறியாகத்தான் இருக்கும்.ஆனால், இனவாதமற்ற அரசியல் முன்நகர்வு நாட்டின் வளர்ச்சியோடும் மேம்பாட்டோடும் நம்மையும் கரம் பிடித்து அழைத்து செல்லும் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.சுமார் 60 ஆண்டுகள் நாம் தொடர்ந்து கைவிடப்பட்டதற்கு அம்னோ தேசிய முன்னணி கொண்டிருந்த இனவாத போக்கும் அதில் அங்கத்துவம் பெற்றிருந்த ம இ காவின் இனவாத அரசியல் நகர்வும்தான் காரணம் என்பதை இந்தியர்கள் மறந்து விடக்கூடாது.

நமது உரிமைக்கும் தேவைக்கும் நாம் வாக்களித்து தேர்வு செய்த நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு.அதனால்,இந்திய சமுதாயத்தை ஓரங்கட்டி விட்டு அவர்கள் எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கப் போவதில்லை. அரசாங்கமும் இந்திய சமுதாயத்தை புறக்கணித்து விட்டு பிற இனங்களின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தப் போவதில்லை. நாம் அனைவரும் மலேசியர்கள். நம்மிடையே உயர்ந்திருக்கும் இந்த சிந்தனை நமது புதிய அரசாங்கத்திடமும் உயிர்க்கொண்டுள்ளது. எனவே, மலேசியா மலேசியர்களுக்கு எனும் சிந்தனையில் நாட்டின் வளர்ச்சியோடும் மேம்பாட்டோடும் இந்திய சமுதாயமும் சரியான இலக்கில் முன்னேறும் என்பதில் மலேசிய இந்தியர்களுக்கு துளியும் ஐயம் தேவையில்லை.

டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையில் சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமுதாயம் எம்மாதிரியான நன்மைகளை அடைந்தார்களோ அதுபோலவே நம்பிக்கை கூட்டணியின் மத்திய அரசாங்கத்தின் கீழும் இந்திய சமுதாயம் தொடர்ந்து பல்வேறு நன்மைகளை அடைவார்கள்.நாட்டின் அனைத்து திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் இந்திய சமுதாயத்தை ஒருபோதும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கைவிடாது.
புதிய மாற்றத்திற்கும் புதிய நம்பிக்கைக்கும் புதிய மலேசியாவிற்கும் புத்துணர்ச்சி அளித்த அனைத்து மலேசியர்களுக்கும் குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கும் வாழ்த்துகளை கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம்.புதிய மலேசியாவில் இருக்கும் வாய்ப்புகளை நாடி சென்று இந்திய சமுதாயம் நன்மை அடைய வேண்டும்.வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும் என காத்திருக்காதீர்.இருக்கும் வாய்ப்பினை நன்முறையில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சியோடும் மேம்பாட்டோடும் கைகோர்த்து வெற்றியை எட்டுவதற்கு இந்திய சமுதாயம் விவேகமாக செயல்பட வேண்டும் என்பதே சிலாங்கூர் இன்றுவின் எதிர்ப்பார்ப்பு.
நன்றி

கு.குணசேகரன் குப்பன்

சிலாங்கூர் இன்று

 


Pengarang :