SELANGOR

கீஸ் உதவி திட்டம் மக்களோடு அணுக்கமான உறவினை வலுப்படுத்துகிறது

பத்துகேவ்ஸ்

கீஸ் எனப்படும் அன்புத் தாய் விவேக அட்டை திட்டத்தின் மூலம் மக்களோடு அணுக்கமான உறவினை வலுப்படுத்த மாநில அரசாங்கம் புதிய அணுகுமுறையினை கையாண்டிருப்பதாக மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி குறிப்பிட்டார்.இத்திட்டம் மக்களுக்கான நன் திட்டம் என்றும் மாநில அரசாங்கத்தின் பரிவு மிக்க திட்டத்தில் இதுவொரு மைல் கல் என்றும் அவர் கூறினார்.
மாநில அரசாங்கத்தின் இலக்கு 40,000 பேராக இருந்த போதில் மக்களின் விண்ணப்பம் அதையும் கடந்து அதிகமான விண்ணப்பங்கள் குவிந்திருப்பதாகவும் அஃது இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பினை பெற்றிருப்பதற்கு தக்க சான்று எனவும் கூறினார்.
அதிகமான மகளிர் தொடர்ந்து விண்ணப்பம் செய்து வந்தாலும் நடப்பில் இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என கூறிய அவர் தொடர்ந்து மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கிட மாநில அரசு சார்ந்த பிற நிறுவனங்களின் உதவியும் நாடப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.இதன் மூலம் இலக்கை கடந்து குவிந்திருக்கும் விண்ணப்பங்களுக்கு உதவிட முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்தாண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா என வினவிய போது அஃது உத்தரவாதமற்றது என குறிப்பிட்ட அவர் மாநில அரசாங்கம் தொடர்ந்து பரிவு மிக்க திட்டத்தின் மூலம் மக்களுக்கு பெரும் பங்காற்றிடும் என்பதை மட்டும் உறுதிப்படுத்தினார்.மேலும்,பரிவு மிக்க திட்டம் சார்ந்த நடவடிக்கைகளில் மேம்பாடுகளும் விரிவாக்கமும் மேற்கொள்ளப்படும் என்றார்.
அதேவேளையில்,அனைத்து பரிவு மிக்க திட்டங்களும் சீர்த்தூக்கிப் பார்க்கப்படுவதாகவும் அதனை மேம்படுத்துவதற்கும் அதனை உயரிய நிலைக்கு கொண்டு செல்லவும் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறிய மந்திரி பெசார் 10 ஆண்டுகளில் தொடர்ந்து அத்திட்டம் மக்களிடையே அடுத்த கட்ட நகர்வினை நோக்கி பயணிக்க மறு ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது என்றார்.
இருப்பினும்,எந்நிலையிலும் மாநில அரசாங்கம் பரிவு மிக்க திட்டங்களை நிறுத்தாது.அஃது தொடர்ந்து இம்மாநிலத்தில் நிலைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :