Kanak-kanak yang menerima sumbangan daripada ADN Kota Raja bergambar bersama Jes
ECONOMYNATIONALSELANGOR

தீபாவளியன்று கடைபிடிக்க வேண்டிய சிகப்பு மண்டலம் மற்றும் இதர பகுதிகளுக்கான 2 வித விதிமுறைகள்

கோலாலம்பூர், நவ 5- கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இம்மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியின் போது கடைபிடிக்க வேண்டிய கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய  சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி) அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

ஆலயங்களுக்கான விதிமுறைகள்

  • உடல் உஷ்ணத்தை சோதிப்பதற்கும் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய அறிகுறிகளான இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்றவற்றை கண்டறிவதற்கும் ஏதுவாக ஆலய வாயிலில் முகப்பிடம் அமைக்க வேண்டும்.
  • பக்தர்களின் வருகையை மை செஜாத்ரா செயலி அல்லது புத்தகம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
  • கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், 12 வயதுக்கும் குறைவான சிறார்கள் ஆலயம் வருவது தவிர்க்கப்பட வேண்டும்.
  • ஆலய வழிபாடுகள் அனைத்தும் ஆலயங்களைத் திறப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட செயலாக்க நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும். ஆலய வளாக அளவைப் பொறுத்து ஒரு சமயத்தில் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருக்கக் கூடாது.
  • காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை வழிபாடுகள் நடத்த அனுமதிக்கப்படும். அந்த வழிபாட்டு நேரம் தலா 30 நிமிடம் என்ற அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட வேண்டும். வழிபாடு முடிந்த ஒவ்வொரு முறையும் 30 நிமிட நேரத்திற்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பிரசாதம் பொட்டலங்களில் வழங்கப்பட வேண்டும் என்பதோடு வழிபாடு முடிந்தவுடன் பக்தர்கள் ஆலயத்திலிருந்து வெளியேறி விட வேண்டும்.

வீடுகளுக்கான விதிமுறைகள்

  • தரை வீடுகளைப் பொறுத்த வரை ஒரு நேரத்தில் 20க்கும் குறைவான விருந்தினர்கள் மட்டுமே தீபாவளி உபசரிப்பில் கலந்து கொள்ள முடியும்.
  • அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்த வரை 1500 சதுர அடி பரப்பளவிலான வீடுகளில் 10க்கும் குறைவான விருந்தினர்களும் 2500 சதுர அடி பரப்பளவிலான வீடுகளில் 15க்கும் குறைவான விருந்தினர்களும் ஒரு சமயத்தில் அனுமதிக்கப்படுவர்.
  • குடும்ப உறுப்பினர்கள் எந்நேரமும் சுவாசக் கவசம் அணிந்திருப்பதையும் குறைந்தது ஒரு மீட்டர் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் அதே சமயம் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சுத்தத்தை பேணும் நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

வியாபார நடவடிக்கைகள்

  • ஊராட்சி மன்றங்கள் அல்லது அமலாக்கத் துறையினர் அனுமதி அளித்த இடங்களில் மட்டும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
  • எனினும், இணையம் வாயிலாக வர்த்தக நடவடிக்கைளை மேற்கொள்ள வர்த்தகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட இடங்களுக்கான எஸ்..பி. விதிமுறைகள்

ஆலயங்களுக்கான விதிமுறைகள்

  • ஆலயங்களில் அனைத்து வழிபாட்டு நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடையாது.

வீடுகளுக்கான விதிமுறைகள்

  • குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே தீபாவளியைக் கொண்டாட அனுமதிக்கப்படும். கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, சுத்தத்தை பேணுவது, நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, நெருக்கத்தில் நின்று உரையாடுவதை தவிர்ப்பது போன்ற நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்.
  • உணவு மேசைகள் மற்றும் அடிக்கடி புழக்கத்தில் இருக்கும் இடங்களில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
  • உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வதை முற்றாக தவிர்க்க வேண்டும்

வியாபார நடவடிக்கைகள்

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டம் தொடர்புடைய சீரான செயலாக்க நடைமுறை தொடர்பான மேல் விபரங்களை தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அகப்பக்கத்தில் காணலாம்.

 


Pengarang :