SELANGOR

சிலாங்கூர் மக்களாட்சி தத்துவத்தை பின்பற்றுகிறது; அனைவருக்கும் மேம்பாட்டு நிதி கிடைக்கும்!!!

உலு கிள்ளான், பிப்ரவரி 10:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து மக்களாட்சி நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது என்றும் மக்கள் பிரதிநிதிகளின் மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக கடந்த தேர்தலில் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் செயல்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். மலேசியாவில் சிலாங்கூர் மாநிலம் மட்டுமே எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது என்றார்.

”  நான் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன், ஆனாலும் அம்னோ தேசிய முன்னணி மத்திய அரசாங்கம் எனக்கு எந்த ஒரு நிதி ஒதுக்கீடுகளை வழங்கவில்லை. ஆனாலும், சிலாங்கூர் மாநிலத்தின் அம்னோ தேசிய முன்னணியின் 12 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மக்களாட்சி நடைமுறையை பின்பற்றி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறோம்.

 

 

 

 

 

”  அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர், ஆகவே நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. அம்னோ சட்ட மன்ற உறுப்பினர்களுக்கே நான் வழங்குகிறேன். நான் ஏன் பாஸ் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு வழங்க மாட்டேன். ஆனாலும், அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது மக்களின் வரிப்பணம், நான் நிர்வாகம் மட்டுமே செய்கிறேன்,” என்று கீஸ் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது  அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இன்னும் மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகள் பெறாத சட்ட மன்ற உறுப்பினர்கள் மாவட்ட அதிகாரியை சந்தித்து பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று தெரிவித்தார்.


Pengarang :