NATIONAL

தாபோங் ஹாஜி தலைவர் பதவியை, அப்துல் ஹாஜீஸ் ராஜினாமா?

ஷா ஆலம் , மே 24:

தாபோங் ஹாஜி வாரியத்தின் (திஎச்) தலைவர் பதவியை டத்தோ ஸ்ரீ பங்லீமா அப்துல் ஹாஜீஸ் அப்துல் ரஹீம், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றிய சில நாட்களில் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் மற்றும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாஜிஸ் தனது ராஜினாமா கடிதத்தை தாபோங் ஹாஜி வாரியத்தின் சட்ட பிரிவிற்கு கடந்த மே 14-இல் அனுப்பியதாக கூறினார்.

”  நான் பிரதமர்துறை அமைச்சரால் நியமனம் செய்யப்பட்டேன். ஆகவே, ராஜினாமா கடிதத்தையும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வழங்குகிறேன். இதுவரை நான் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். ஆனாலும், பிரதமர்துறை அமைச்சர் இன்னும் நியமிக்கப்படவில்லை. என்னுடைய ராஜினாமா இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை,” என்று தி ஸ்தார் ஒன்லைன்க்கு ஹாஜீஸ்  தெரிவித்தார்.

தாபோங் ஹாஜி வாரியம் பிரதமர்துறை அமைச்சின் கீழ் (இஸ்லாமிய விவகாரங்கள்) இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ( எஸ்பிஆர்எம்) சுபாங் ஜெயா மற்றும் கெடாவில் உள்ள அப்துல் ஹாஜீஸ் வீடுகளை சோதனை நடத்தினர். ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிங் வீட்டில் கெடா எஸ்பிஆர்எம் ரிம 100,000-மும் சுபாங் ஜெயா வீட்டில் ரிம 400,000-மும் கைப்பற்றியது.


Pengarang :