NATIONAL

வாடகை செலுத்தி விட்டு உரிமையாளராகும் வீடமைப்புத் திட்டம் செப்டம்பரில் அமல்! – ஜூரைடா

புத்ராஜெயா, ஜூலை 25-

‘வாடகை செலுத்தி விட்டு உரிமையாளராகும் வீடமைப்புத் திட்டம்’ எனும் புதிய திட்டத்தை அரசாங்கம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வீடமைப்புத் திட்டம் மாதம் ஒன்றுக்கு 3, 000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவோருக்காக அறிமுகம் செய்யப்படவிருப்பதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் கூறினார்.

“இந்த வீட்டிற்கு அவர்கள் முன் பணம் செலுத்தத் தேவையில்லை. நேரடியாக வாடகை செலுத்தலாம். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் சம்பந்தப்பட்டவரின் நிதி நிலையை ஆராய்வதோடு அவர் இந்த வீட்டை வாங்குவதற்கு தகுதி பெற்றுள்ளாரா என்பதையும் நாங்கள் ஆராய்வோம்” என்றார் அவர்.

“இது 3 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவதோடு முதன் முறையாக வீடு வாங்கும் இளையோருக்கான திட்டமாகும். இந்த வீட்டின் மதிப்பு வெ. 300,000 ஆகும்” என்று செய்தியாளர் சந்திப்பில் ஜூரைடா கூறினார்.

இத்திட்டத்திற்காக வீட்டு கடனுதவி வழங்கக்கூடிய வங்கி தரப்புகளுடன் அரசாங்கம் தற்போது பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“உள்நாட்டு வங்கிகள் இத்திட்டத்தில் பங்கெடுப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. இந்நடவடிக்கைக்குப் பின்னர் மக்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்படும்” என்றார்.

அதே வேளையில், பிடிபிடிஎன் எனும் உயர் கல்வி கடனுதவி பெற்றவர்கள் இந்த வீடமைப்புத் திட்டத்திற்காக கடனுதவி பெறத் தகுதி பெறுவார்களா என்பது குறித்தும் வங்கி தரப்பு முடிவெடுக்கும் என்றும் அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டு கடனுதவியை அங்கீகரிப்பதற்கு அவருக்கு கடப்பாடுகள் ஏதும் உள்ளதா என்பதை அவர்களின் வருமானத்தைக் கொண்டு வங்கிகள் சோதனை நடத்தும் என்றார்.


Pengarang :