NATIONAL

ஜூரைடா: மலேசிய மக்கள் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் !!!

ஆகஸ்ட் 31, 2019

வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சரின் 62-வது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி

மலேசிய மக்கள் அனைவரும் ஒருமைப்பாட்டை பேணிக் காக்க வேண்டும் என்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் எந்த தரப்பினரின் முயற்சிகளையும் நாம் தவிர்க்க வேண்டும், இதன் மூலம் நம் நாட்டை மறுசீரமைப்பு செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான அரசாங்கம் மலேசிய திருநாட்டை சரியான பாதையில் மீண்டும் கொண்டு செல்லும் பணிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பும் மற்றும் ஆதரவும் வழங்க வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட சுதந்திர தியாகிகளின் அர்ப்பணிப்பை மலேசியர்கள் அனைவரும் நினைவுக் கூர்ந்து போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மலேசியரின் கடமை ஆகும்.

நமது சுதந்திர போராட்டவாதிகளின் உணர்வுகளை பின்பற்றி நாம் நேசிக்கும்  நாட்டை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளுக்கு  உறுதுணையாக இருப்பேன். வெவ்வேறு பின்னணியில் மற்றும் சூழலில் இருந்து நாம் அனைவரும் வந்திருந்தாலும் நமது குறிக்கோள் ஒன்றுதான். எல்லா குடிமக்களும் வசதியான மற்றும் வளமான வாழ்க்கை வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் என்ற முறையில் மக்களின் நல்வாழ்வு மற்றும் தேவைகளுக்கு நான் கவனம் செலுத்தி வருகிறேன். தரமான சமூக மேம்பாடு, சுத்தமான நாடு, வசதியான மற்றும் கட்டுப்படியான வீடுகள், மேலும் தரமான ஊராட்சி மன்றங்களின் சேவைகள் ஆகியவற்றை என் தலைமையிலான அமைச்சு உறுதி அளிக்கிறது.

 

ஜூரைடா கமாரூடின்

வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர்


Pengarang :