PKS Malaysia yang membuat pelaburan dalam bidang teknologi boleh menambah antara RM79 bilion dan RM99 bilion kepada KDNK menjelang 2024. Foto: BERNAMA
ECONOMYSELANGOR

இலக்கவியல் வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி பெறும்

கோலாலம்பூர், வர்த்தக ஸ்தாபனங்கள் குறிப்பாகச் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறைகள் தங்கள் நடவடிக்கையை இலக்கவியல்மயமாக்கத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து நாட்டில் இலக்கவியல் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி காணும் என்று பிரசித்தி மின்னியல் வர்த்தகத் தளமான லஸாடா கூறியுள்ளது.

இணையம் வாயிலாக வர்த்தகம் செய்வது மீதான நம்பிக்கையும் பொதுமக்கள் மத்தியில் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் அது தெரிவித்தது. பொதுமக்கள் மத்தியில் குறிப்பாகக் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிறப்பிக்கப்பட்ட பின்னர்  பொருள்களை வாங்குவது மற்றும் பணம் செலுத்துவது தொடர்பான அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று லஸாடா மலேசியா நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி லியோ சோவ் கூறினார்.

வாங்கும் பொருள்களுக்குப் பணம் செலுத்துவதில் காணப்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிமீது பொதுமக்களிடம் நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் கோவிட்-19 நோய் தொற்று காரணமாகப் பயனீட்டாளர்கள், வியாபாரிகள் மத்தியில் இலக்கவியல் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

லஸடாவைப் பொறுத்த மட்டில் விற்பனையாளர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் அரையாண்டில் 200 விழுக்காடு வரை அதிகரித்துள்ள தவலையும் லியோ வெளியிட்டார். தங்களின் அன்றாட தேவைகளை இலக்கவியல் வாயிலாக ஈடுசெய்யவே மலேசியர்கள் அதிகம் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இணையம் வழி பொருள்களை வாங்குவோரில் 35 விழுக்காட்டினர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தின் போதுதான் முதன் முறையாக இலக்கவியல் வர்த்தகத்திற்கு மாறியதாகத் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலக்கவியல் முறையிலான பணப்பட்டுவாடா பாதுகாப்பானது மற்றும் சிக்கனமானது. மேலும் ரொக்கப் பணத்தைக் கையாள்வதற்கான அவசியமும் இல்லை. வர்த்தகர்களும் வாடிக்கையாளர்களும் வங்கியை நாட வேண்டிய தேவையும் இருக்காது என்றார் அவர்.

 

 


Pengarang :