SELANGOR

நீர் மாசுபடுவதற்குக் காரணமான தொழிற்சாலையை உடைக்க செலாயாங் நகராண்மைக்கழகம் நடவடிக்கை

ஷா ஆலம், செப் 7- ரவாங், சுங்கை கோங் ஆறு மாசுபடுவதற்குக் காரணமான கனரக
இயந்திரப் பழுதுபார்ப்புத் தொழிற்சாலையை உடைப்பதற்கான நடவடிக்கையைச் செலாயாங் நகராண்மைக்கழகம் முன்னெடுத்துள்ளது.

செலாயாங் நகராண்மைக் கழகத்தின் அனுமதியின்றிக் கட்டிடம் கட்டியது தொடர்பில் 1970ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் 70(1)வது பிரிவின் கீழ் ஆணை ஒன்றை அமலாக்க அதிகாரிகள் இன்று காலை 9.00 மணியளவில் அந்தத் தொழிற்சாலையின் வாயிலில் ஒட்டினர்.

அந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான அனுமதியைத் தாங்கள் பெற்றதற்கான ஆதாரத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் காட்டுவதற்கு மூன்று நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகச் செலாயாங் நகராண்மைக் கழகத்தின் வர்த்தகப் பரிவு இயக்குநர் முகமது ஜின் மசூட் கூறினார்.

அந்த மூன்று நாட்களுக்குள் தங்கள் வசம் உள்ள ஆதாரத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினர்
காட்டத் தவறினால் நகராண்மைக் கழகம் அந்தத் தொழிற்சாலை கட்டிடத்தை உடைக்கும்
பணியை ஆரம்பிக்கும் என அவர் சொன்னார்.

அந்தத் தொழிற்சாலை செயல்படத் தொடங்கிய 2014ஆம் ஆண்டு முதல் வர்த்தக லைசென்ஸ் பெற்றிருக்கவில்லை எனக் கூறிய அவர், இரு முறை எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் அதனை அத்தொழிற்சாலை நிர்வாகம் பொருட்படுத்தவில்லை என்றார்.

இந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளிப்பட்டதாக நம்பப்படும் கழிவு நீர் ஆற்றில் கலந்த
காரணத்தால் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட
குடியிருப்பாளர்கள் மூன்று தினங்களாக நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கினர்.
அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் வர்த்தகம் புரிவதற்கான அனுமதி கோரி எந்த
விண்ணப்பத்தையும் இதுவரை நகராண்மைக்கழகத்திடம் சமர்ப்பிக்கவிலை என்றும் முகமது ஜின் கூறினார்.


Pengarang :