NATIONAL

தொழில் துறையில் இலக்கவியல் மற்றும் தானியங்கியின் பயன்பாடுகளால் வேலை இழப்பு!!

ஷா ஆலம்,செப் 7- புதிய இயல்பு முறையின் காரணமாக தொழில் துறையில் இலக்கவியல் மற்றும் தானியங்கியின் பயன்பாடு அதிகரித்து அதனால் மாநில மக்கள் வேலை இழப்புக்கு ஆளாவதை சிலாங்கூர் அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

விவேக மாநிலம் என்ற கொள்கையை  அமல் படுத்தும் போது தொழிலாளர்களுக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதால் இந்த தொழில்நுட்ப பொறியை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தற்போது நாம் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய காலத்தில் இருக்கிறோம்.  நாம் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே விவேக மாநிலம் எனும் கோட்பாட்டை தொடக்கி  விட்டதால் நாம் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளாக விளங்குகிறோம். வரும் 2025ஆம் ஆண்டு வாக்கில் சிலாங்கூரை முழு இலக்கவியல் மாநிலமாக மாற்ற இலக்கு வகுத்துள்ளோம் என்றார் அவர்.

உற்பத்தி துறை சார்ந்த பல நிறுவனங்கள் இன்னும் ஆள்பலத்தை சார்ந்துள்ளதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார உத்வேகத்திற்கான மூன்றாம் கட்ட திட்டத்தில் தொழில் திறன் பயிற்சிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர் கொள்வதில் கடைப் பிடித்ததைப் போல் இவ்விவகாரத்திலும் நாம் மத்திய அரசு மற்றும் சமூக அமைப்புகளுடன் விவாதிக்க வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநிலத்தின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார உந்து சக்தியாக சிலாங்கூர் தொடர்ந்து விளங்குவதற்கு ஏதுவாக பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வது, வருமான இடைவெளியை குறைப்பது, சுபிட்சத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது ஆகியவற்றில் தங்களுக்கு உள்ள கடப்பாட்டை மந்திரி புசார் மீண்டும் மறு உறுதிப்படுத்தினார்.


Pengarang :