ECONOMYNATIONALSELANGOR

எழுச்சி கொள்ள இந்திய சமூகம் முனைப்பு காட்ட வேண்டும் -ரோட்சியா இஸ்மாயில் வேண்டுகோள்

ஷா ஆலம், செப் 16- சிலாங்கூர் மாநில மக்கள் தொகையில் 11.2 விழுக்காடாக இருக்கும் இந்திய சமூகம் கிடைக்கும்  வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முனைப்பு காட்ட வேண்டும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.

இந்திய சமூகம் எழுச்சி காண்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளதாக கூறிய அவர், நமக்காக மட்டுமின்றி அடுத்து வரும் சந்ததியினரின் நலனுக்காகவும் அத்தகைய வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தி முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.

சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடத்தப்பட்ட தொழில்திறன் பயிற்சியில் பங்கு கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சித்தம் திட்டத்தின் வாயிலாக இந்திய சமூகத்தில் தொழில்முனைவோரை உருவாக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருவாகவும் அவர் குறிப்பிட்டார்.

சித்தம் திட்டத்தின் வாயிலாக திறன் பெற்ற தொழில்முனைவோரை உருவாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகிறோம். இத்திட்டம் நிதி வழங்குவதை நோக்கமாக கொண்டது அல்ல. இந்திய சமூகத்தை தொழில்திறன் பெற்ற சமூகமாக  உருவாக்கும் நோக்கிலானது என்றார் அவர்.

சித்தம் திட்டம் தொழில்முனைவோர் மேம்பாடு, திறன் மற்றும் தயாரிப்பு பயிற்சி, வர்த்தகம் மற்றும் தொழில் புரிவதற்கு தேவையான கருவிகளுக்கான நிதி உதவித் திட்டம் மற்றும் குரோ எனப்படும் சுய வழியில் வளம் காணும் திட்டம் ஆகிய நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சித்தம் உள்பட இந்திய சமூகத்திற்காக சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்து குறைகூறல்கள் வந்த தையும் ரோட்சியா தமதுரையில் சுட்டிக்காட்டினார்.

இது போன்ற திட்டங்களை மேற்கொள்வதை யாரும் தடுக்க கூடாது. மாறாக சம்பந்தப்பட்டத் தரப்பினர் குறிப்பாக மத்திய அரசு இதனை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். இந்திய சமூகம் மேம்பாட்டு அலையிலிருந்து பின்தங்கி விடாமலிருப்பதை உறுதி செய்ய கூடுதல் நிதியை அச்சமூகத்திற்கு வழங்க வேண்டும் என ரோட்சியா வலியுறுத்தினார்.


Pengarang :