ECONOMYSELANGOR

தொழில்திறன் பயிற்சி வழி கோவிட்-19 சவாலை சமாளிப்போம்! சமூகத்திற்கு குணராஜ் அறைகூவல்

ஷா ஆலம், செப் 16- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க தொழில் திறன் பயிற்சிகளில் இந்திய சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

அந்த நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள வருமான பாதிப்பை சமாளிக்க பகுதி நேரமாக இரண்டு அல்லது மூன்று வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் திறன் பயிற்சித் திட்டங்கள் மூலம் ஏதாவது ஒரு கைத்தொழிலை நாம் கற்றுக் கொள்ளும் பட்சத்தில் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்குரிய வாய்ப்பினைப் பெற முடியும் என்றார் அவர்.

தற்போது உள்ளதைவிட அதிக வருமானத்தைப் பெறுவதற்கான வழிகளை நாம் தொடர்ந்து ஆராய வேண்டும் எனக் கூறிய அவர், சௌகரியமான சூழலில் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு சவால்மிக்க சூழலை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்றும் குணராஜ் கேட்டுக் கொண்டார்.

சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தொழிலதிறன் பயற்சியில் பங்கு கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தொழில்திறன் மேம்பாட்டுத் திட்டமாக இந்த சித்தம் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் வழி முத கட்டமாக 40 பேர் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றுள்ள வேளையில் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு 30 பேர் தயாராகிவுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்கு காரணமாக விளங்கி வரும் சித்தம் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  மற்றும் இந்திய சமூகத் தலைவர்களைத் நான் பெரிதும் பாராட்டுகிறேன் என்றார் அவர்.


Pengarang :