NATIONAL

பொது முடக்கம் காரணமாக கட்டுமானத் துறைக்கு மாதம் வெ. 1,160 கோடி இழப்பு

ஷா ஆலம், செப் 19-  இவ்வாண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கட்டுமானத் தொழில் துறைக்கு மாதம் 1,160 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டது.

கட்டுமானத் துறை பதிவு செய்த மொத்த இழப்பில் 29 விழுக்காடு  அத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட வேலை இழப்பு காரணமாக உண்டானதாகும் என்று மலேசிய மாஸ்டர் பில்டர்ஸ் சங்கத்தின் தலைவர் ஃபூ செக் லீ கூறினார்.

கட்டுமானத் துறை திடீர் முடக்கம் கண்டதால் இயந்திரங்களை வைத்திருப்போர் தங்கள் இயந்திரங்களை விற்கவோ வாடகைக்கு விடவோ முடியாத நிலை ஏற்பட்டது. தொழிற்-சாலைகளாலும் கட்டுமானப் பொருட்களை தயாரிக்கவும் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும் முடியவில்லை என்றார் அவர்.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்த போதுதான் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக கூறிய அவர், எனினும், 80 விழுக்காட்டு செயலாக்கத் திறனை மட்டுமே அதனால் அடைய முடிந்ததாகவும்  சொன்னார்.

கட்டுமானத் துறையின் மீட்சிக்காக பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்த அரசாங்கத்திற்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். கடனை திருப்பி செலுத்துவதற்கான ஆறு மாதத்திற்கான விலக்களிப்பை அரசாங்கம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :